Published : 23 Feb 2017 11:38 AM
Last Updated : 23 Feb 2017 11:38 AM

உலக மசாலா: அம்மம்மா... எல்லாம் ஆன்மா படுத்தும் பாடு!

சீனாவின் சோங்க்விங் நகரில் கல்லறை தியானம் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது. ஆனால், மெரீனா கல்லறை தியானத்தைவிட இது ஒரு படி கூடுதல் திக் திக்... கல்லறைக்கு உள்ளேயே போய் இந்த தியானத்தை நடத்த வேண்டும்! பிரச்சினையின்றி விவாகரத்து கிடைக்கவும் விவாகரத்துக்குப் பிறகு வாழ்க்கை வெற்றிகரமாக அமையவும் இது உதவுகிறது. “எனக்கு 19 வயதில் திருமணம். 21 வயதில் குழந்தை. 30 வயதில் விவாகரத்து கிடைத்துவிட்டது. அதற்குப் பிறகு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். அப்போது தான் கல்லறை தியானம் பற்றி அறிந்தேன். தியானம் செய்து திரும்பினேன். என் கவலைகள் மாயமாகின. நம்பிக்கையோடு வாழ்க்கையை நடத்தி வருகிறேன். என்னைப் போல பாதிக்கப்பட்ட பெண்கள் பிரச்சினையிலிருந்து மீண்டு வருவதற்காகவே இந்த தியானத்தை ஆரம்பித்திருக்கிறேன். இதில் கலந்துகொள்ளும் பெண்கள், குழிக்குள் படுத்தபடி, கண்களை மூடி தியானம் செய்ய வேண்டும். அவர்களுக்கு மரண அனுபவம் கிடைக்கும். கடந்த காலம் மறந்து போகும். புதிய வாழ்க்கை மீது நம்பிக்கை துளிர்க்கும். எனவே தோல்வியைக் கண்டு பயம் வேண்டாம். விவாகரத்துக்குப் பிறகும் அழகான வாழ்க்கை இருக்கிறது” என்கிறார் லியு டைஜி.

பிலிப்பைன்ஸ் கடற்கரையில் 3 துடுப்பு மீன்கள் ஒதுங்கின. கடலின் தூதராகக் கருதப்படும் இந்த மீன்கள் கரைக்கு வந்தால், நிலநடுக்கம் வரும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள். ஆழ்கடலில் வசிக்கும் துடுப்பு மீன்கள் பொதுவாக 17 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை. ஆனால் பிலிப்பைன்ஸில் ஒதுங்கிய மீன்கள் 15 அடி நீளம் மட்டுமே இருந்தன. டெக்டானிக் தட்டுகள் நகர்வதால் தான் ஆழ்கடல் மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதை நாம் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்கிறார்கள் சில ஆய்வாளர் கள். இன்னும் சில ஆய்வாளர்கள், ஆழ்கடலில் வசிக்கும் துடுப்பு மீன்கள் உடல்நிலை சரியில்லாதபோது, கரைக்கு வருவது இயல்புதான் என்கிறார்கள். ஜப்பானைச் சேர்ந்த கியோஷி வாடட்சுமி என்ற நிலநடுக்க ஆராய்ச்சியாளர், “கடல் விடுக்கும் செய்தியாகவே இந்த மீன்களைக் கருத வேண்டும். 2011-ம் ஆண்டு சுனாமி வருவதற்கு முன்பு துடுப்பு மீன்கள் இப்படி கரை ஒதுங்கின” என்கிறார்.

மீன்கள் இயல்பாகக் கரை ஒதுங்கியதாகவே இருக்கட்டும்!

பிரிட்டனில் வசித்த டாக்மாரா பிரிஸிபைஸ் போலந்து நாட்டைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் 9 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனில் குடியேறியது. பள்ளியில் சக மாணவிகளால் டாக்மாரா, அடிக்கடி இனவெறி தாக்குதல்களுக்கு உள்ளானார். கடந்த மே மாதம் பள்ளிக் கழிவறையில் தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் குடும்பத்தினருக்கு தெரியவில்லை. சக தோழிகளால் டாக்மாரா இனவெறித் தாக்குதலைச் சந்தித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளியின் இணையதளத்துக்கு ஒரு புகார் அளித்துவிட்டே, டாக்மாரா இந்த மோசமான முடிவை எடுத்திருக்கிறார். “எங்கள் குழந்தையின் இறப்புக்குக் காரணமான வர்களைக் குற்றவாளிகளாக மாற்றுவதில் விருப்பம் இல்லை. இன்றும் இனம் குறித்த பாகுபாடு நிலவுவது மோசமானது. அதை அவர்கள் உணர்ந்தால் போதும்” என்கின்றனர் டாக்மாராவின் குடும்பத்தினர்.

இனம், சாதி பேதங்கள் எப்போது மறையும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x