

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இலங்கை வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. சுமார் 7 லட்சம் பேர் வாக்குரிமை செலுத்துவார்கள். தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்டது இந்த பகுதி.
பிரசாரம் ஆரவாரத்துக்கு இடமின்றி நடைபெறுகிறது. தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று வேட்பாளர்கள் ஆதரவு திரட்ட தேர்தல் ஆணையம் அனுமதி தரவில்லை. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களைக் கொண்டது இந்த மாகாணம்.
செப்டம்பர் 21ம் தேதியிலேயே மத்திய மற்றும் வட மேற்கு மாகாண சபைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் முதல் முறையாக நடைபெறுவதால் அதன்மீது இலங்கையிலும் இலங்கைக்கு அப்பாலும் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
1987ல் ஏற்பட்ட இந்திய-இலங்கை உடன்பாட்டின் காரணமாக 13வது சட்டத் திருத்தத்துக்கு வழி பிறந்து அதன்மூலமாக கிடைத்த தனி அதிகாரங்களுடன் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
போர் முடிந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில் இந்த பகுதி மக்களுக்கு எண்ணற்ற பிரச்சினைகள். எங்கும் ராணுவத்தின் நடமாட்டம், ராணுவ உளவுப் பிரிவினரால் உளவு பார்க்கப்படுவது, வேலைவாய்ப்பின்மை என பிரச்சினைகள் நீளுகின்றன. குடும்பத்தினர் காணாமல் போவதாக புகார் கூறுவது பல குடும்பங்களில் வாடிக்கையாகிவிட்டது. இந்த பிரச்சினைகளை, தாங்கள் எதிர்கொள்ளும் அவலத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இங்கு வாழும் தமிழர்கள் உலகறியச் செய்ய தவறுவதில்லை. அண்மையில் ஐநா மனித உரிமை ஆணையர் ஆய்வு செய்ய வந்தபோது அவரிடமும் இந்த பிரச்சினைகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு எப்போதுமே மறுக்கிறது. இந்த பகுதியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக முதலீடு செய்துள்ளது. மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள், நடைபாதைகள், போக்குவரத்து வசதி, பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளை உதாரணமாக எடுத்துக்காட்டி தன்மீதான அவப்பெயரை துடைக்கப் பார்க்கிறது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் உச்ச நீதிமன்ற முன்னாள் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இலங்கை அரசு தரப்பில் களம் இறங்கும் எஸ்.தவராஜா (ஈழம் மக்கள் ஜனநாயக கட்சி), அங்கஜன் ராமநாதன் (இலங்கை சுதந்திர கட்சி) ஆகியோருக்கும் இடையேதான் வடக்கு மாகாண தேர்தலில் பிரதான போட்டி.
தமிழர் பகுதியில் மேற்கொள்ளப் பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகளை ஈழம் மக்கள் ஜனநாயக கட்சியும், அதிபர் ராஜபட்சவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் முன்வைத்துப் பிரசாரம் செய்தாலும் அது மக்கள் மனதில் இடம்பிடிக்கவில்லை.
வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குத்தான் வெற்றி வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது.