ஈரான் அதிபர் தேர்தலில் ஹசன் ரவ்ஹானி மீண்டும் வெற்றி

ஈரான் அதிபர் தேர்தலில் ஹசன் ரவ்ஹானி மீண்டும் வெற்றி
Updated on
1 min read

ஈரான் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஹசன் ரவ்ஹானி வெற்றிப் பெற்றுள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வாக்காளர்கள் அவரை மீண்டும் அதிபராக தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஈரான் அதிபருக்கான தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபர் ஹசன் ரவ்ஹானிக்கும் (68), எதிர்க்கட்சி வேட்பாளரான இப்ராஹிம் ரைசிக்கும் (56) இடையே நேரடி போட்டி நிலவியது. அதிக அளவில் மக்கள் வாக்குகளை பதிவு செய்ய முன்வந்ததால், சில மணிநேரங்கள் வரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆரம்பம் முதலே தற்போதைய அதிபர் ஹசன் ரவ்ஹானி முன்னிலை வகித்தார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக 2.35 கோடி பேர் (57 சதவீதம்) வாக்களித்திருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அப்துல்ரெஸா ரஹ்மானி உறுதி செய்தார். எதிர்த்து போட்டியிட்ட இப்ராஹிம் ரைசிக்கு (56) 1.58 கோடி பேர் (38.3 சதவீதம்) வாக்களித்துள்ளனர்.

இந்த வெற்றி குறித்து ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்த துணை அதிபர் ஈஷாக் ஜஹான்கிரி, ‘‘ஈரான் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி அளித்த நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாடு நம்பிக்கையுடன் நடைபோட இந்த வெற்றி வழிவகுக்கும்’’ என்றார்.

மிதவாதியான ரவ்ஹானி 2015 முதலே தேர்தலுக்கான காய்களை நகர்த்தினார். உலக நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம், நல்லுறவு ஆகியவற்றை ஏற்படுத்தினார். இதனால் பொருளாதார சிக்கலில் இருந்து ஈரான் மெல்ல மீண்டது.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரைசி பழமைவாத கருத்துகள் கொண்டவர். தேர்தலின்போது மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், ஏழைகள் நலன் காக்கப்படும் என்றும் பிரச்சாரம் செய்தார். ஆனால் அவரது புரட்சிக்கரமான பேச்சுகள் வாக்காளர்களை ஈர்க்கவில்லை என்பது தேர்தல் முடிவில் தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in