Published : 11 Dec 2013 12:00 AM
Last Updated : 11 Dec 2013 12:00 AM

இலங்கையை கண்காணிக்கிறது அமெரிக்கா

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனித நேய சட்டங்கள் மீறப்படுவதாக கூறப்படும் புகார்கள் பற்றி விசாரித்து தக்க நியாயம் வழங்கக் கூடிய அமைப்பை இலங்கை ஏற்படுத்துகிறதா என்பதை உன்னிப்புடன் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மேரி ஹார்ப் திங்கள்கிழமை கூறியதாவது:

பத்திரிகைச் சுதந்திரம், பேச்சுரிமைக்கு கட்டுப்பாடு, சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பு, மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை என இலங்கையில் தொடரும் சம்பவங்கள் பற்றி அமெரிக்கா கவலை அடைந்துள்ளது.

மனித உரிமைகளுக்காக ஆதரவு குரல் கொடுப்பவர்கள் தொடர்ந்து பழி தீர்க்கப்படுகிறார்கள் என்றார் ஹார்ப்.

மனித உரிமை மீறல் மற்றும் இலங்கை தமிழருடனான நல்லிணக்க முயற்சி பற்றி இலங்கைக்கு எதிராக வரும் மார்ச் மாதத்தில் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் மூன்றாவது தீர்மானம் கொண்டுவர சாத்தியம் உள்ள நிலையில் இத்தகைய கருத்து அமெரிக்க தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

26 ஆண்டு காலமாக நடந்த போரை ஒடுக்க விடுதலைப்புலிகளுக்கு எதிராக 2009ல் மேற்கொள்ளப்பட்ட இறுதிக் கட்ட போரின்போது மனித உரிமைகளுக்கு மதிப்பு தராமல் இலங்கை கையாண்ட வழிமுறைகளை கடுமையாக விமர்சித்து ஐநா மனித உரிமை கவுன்சிலில் 2 தீர்மானங்களை நிறைவேற்றியது அமெரிக்கா. இறுதிக் கட்டப் போரின்போது இலங்கை பாதுகாப்புப் படைகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் புகார்கள் பற்றி சுயேச்சையான நம்பத்தக்க விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கையை இந்த தீர்மானங்கள் வலியுறுத்துகின்றன.

இதனிடையே, மனித உரிமைகள் மீறல் புகார் விஷயத்தில் இலங்கை பொறுப்புடன் நடந்து கொள்வதில்லை என 53 உறுப்பினர் அடங்கிய காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் காமன்வெல்த் மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இலங்கையை கண்காணிக்குமாறும் சர்வதேச சமுதாயத்தை அது கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கையில் ‘தமிழர்கள் பெருவாரி யாக வாழும்’ வட பகுதியில் அதிக அளவில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட பணிகளில் அது தலையிடுவதாகவும் புகார் தெரிவித்துள்ளது காமன்வெல்த் மனித உரிமை அமைப்பு. மனித உரிமை ஆதரவாளர்கள், பத்திரிகையாளர்கள் கொடுமைப்படுத்தப்படுவது, காணாமல் போவது தொடர்வதாகவும் அது புகார் செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x