

அமெரிக்காவில் இந்தியப் பொறியாளர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லாவை சுட்டுக்கொன்றதுடன், தடுக்க முயன்ற இருவரைக் காயப்படுத்திய கடற்படை வீரர் ஆடம் பூரிண்டன், ஹூஸ்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
கடந்த 22-ம் தேதியன்று, கான்சாஸ் நகரத்தின் ஒலாதே பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீனிவாஸை ஆடம் பூரிண்டன் என்ற மூத்த கடற்படை வீரர் சுட்டுக் கொன்றார். ''என் நாட்டை விட்டு வெளியேறு'' என்று கூறிக்கொண்டே இந்தியப் பொறியாளரை அந்த நபர் சுட்டதாகக் கூறப்பட்டது. அந்த தாக்குதலில் காப்பாற்ற முயன்ற நண்பர் அலோக் மதாசனி மற்றும் தாக்குதலைத் தடுக்க வந்த இயன் கிரில்லாட் ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
இந்நிலையில் ஆடம் பூரிண்டன், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நீதிமன்றத்தில் ஆஜரானார். ஜான்சன் மாவட்ட அட்டர்னி ஸ்டீவ் ஹோவ், பூரிண்டனுக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்படலாம் என்றார்.
கான்சாஸ் நகரத்தில் இனவெறித் தாக்குதலுக்கான சட்டதிட்டங்கள் இல்லாததால், கொலை தொடர்பான ஆதாரங்களைச் சேகரிப்பதில் எஃப்பிஐ ஈடுபட்டுள்ளது.
பூரிண்டன் இனவெறித் தாக்குதலில் ஈடுபட்டார் என்று எஃப்பிஐ உறுதிப்படுத்தினால், அவருக்கு மரண தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
கடந்த 23-ம் தேதி கைது செய்யப்பட்ட பூரிண்டன், 24-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று குற்றம் நடைபெற்ற கான்சாஸ் நகரத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
பூரிண்டன் தற்போது ஜான்சன் மாவட்ட சிறையில், 20 லட்சம் டாலர்கள் பிணைத் தொகையில் தங்கவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.