

வடகொரியாவின் புளுட்டோனிய மற்றும் யுரேனிய உற்பத்தியைப் பார்க்கும் போது அந்நாட்டிடம் 21-க்கும் அதிகமாக அணுகுண்டுகள் இருக்க வேண்டும் என்று அமெரிக்க ஆய்வமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 18 மாதங்களில் 6-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை வடகொரியா தயாரித்திருக்கலாம் என்று அமெரிக்க ஆய்வமைப்பு சந்தேகிக்கிறது. இதன் மூலம் தனது அணுகுண்டுகள் எண்ணிக்கையை 21-ஆக அதிகரித்திருக்கலாம் என்று அமெரிக்கா ஐயம் வெளியிட்டுள்ளது.
வடகொரியாவின் யாங்பியான் அணு வளாகத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள ஆயுத நோக்கத்திற்கான புளுட்டோனியம் மற்றும் யுரேனியம் ஆகியவற்றை பார்க்கும் போது நிச்சயம் வடகொரியா அணு ஆயுதப் பெருக்கம் செய்து வருவது உறுதியாவதாக பன்னாட்டு பாதுகாப்பு மற்றும் அறிவியல் கழகம் என்ற ஆய்வமைப்பு தெரிவித்துள்ளது.
புளுட்டோனியத்தை மறுஉருவாக்கம் செய்வதற்கென்றே யாங்பியான் அணு உலையை அவர்கள் மீண்டும் இயக்கியுள்ளனர் என்ற சந்தேகத்தை ஆய்வமைப்பு எழுப்புகிறது.
அணு உலையில் செலவழிக்கப்பட்ட எரிபொருளிலிருந்து புளுட்டோனியாத்தை வடகொரியா பெரிய அளவில் எடுக்கத் தொடங்கியதே 2014-ம் ஆண்டு 10 முதல் 16 அணுகுண்டுகளாக இருந்ததை மேலும் அதிகரிக்கவே என்கிறது அமெரிக்க ஆய்வமைப்பு.