Published : 12 Jul 2016 06:31 PM
Last Updated : 12 Jul 2016 06:31 PM

முதியவர்களை பாதிக்கும் ஆழ்மறதி நோயை கண்டறிய புதிய தொழில்நுட்பம்: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஆழ்மறதி என்ற அல்ஷெய்மர் நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பே, அதை கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை இந்திய வம்சாவளி விஞ்ஞானி அடங்கிய அமெரிக்க விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.

முதுமை வயதை எட்டுபவர்களுக்கு மிக அபூர்வமாக அல்ஷெய்மர் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இது ஒரு வகையான ஆழ்ந்த மறதி நோய் என்றும் சில நேரம் மூளையில் சீரற்ற புரதங்கள் படிவதால் ஏற்படும் நோய் என்றும் மருத்துவ உலகம் விளக்குகிறது. குறிப்பாக மொழித் திறன் பாதிக்கப்பட்டு, சிந்திக்கும் ஆற்றலில் தொய்வு ஏற்படும். இரு வேலைகளை இணைத்து செய்ய முடியாமல் தவிப்பார்கள். சற்று முன் நடந்தது, பேசியது ஆகியவையும் மறந்து போகும். பெரும்பாலும் வயதானவர்களுக்கே இந்நோய் தாக்குகிறது. இதனால் ஆரம்ப நிலையிலேயே இந்நோயை கண்டுபிடித்தால் மட்டுமே குணப்படுத்த முடியும்.

இந்நிலையில் அல்ஷெய்மர் நோய்க்கான அறிகுறிகள் தென்படும் முன்னரே, அதை கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை இந்திய வம்சாவளி விஞ்ஞானி அடங்கிய அமெரிக்க விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. கண் விழித்திரையின் (ரெட்டினா) பின்பகுதியை உற்று கவனிப்பதன் மூலம் நோய் பாதித்துள்ளதா என்பதை கண்டுபிடித்துவிடலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து அமெரிக்காவின் மின்னேசோட்டா பல்கலைக்கழகத்தின் ராபர்ட் வின்ஸ் கூறும்போது, ‘‘அல்ஷெய்மர் நோயை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் நோயை குணப்படுத்தும் மருந்துகளை மேம்படுத்துவதற்கும் வழி பிறக்கும்’’ என்றார்.

பல்கலைக்கழகத்தின் மருந்து பிரிவில் பணியாற்றும் இந்தியரான ஸ்வாதி கூறும்போது, ‘‘கண்ணின் விழித் திரை மூளையுடன் மட்டும் இணைந்திருக்கவில்லை. ஒட்டுமொத்த நரம்பு மண்டலங்களுக்கும் விழித் திரை தான் மையம். எனவே இதை உற்று கவனித்தாலே நரம்பு மண்டலங்களில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள், மூளையின் செயல்பாடு ஆகியவற்றை கண்டறிந்துவிடலாம்’’ என்றார்.

இந்த புதிய தொழில்நுட்பத்தை மனிதர்களிடம் பயன்படுத்தும் முன்னோட்ட பரிசோதனை இம்மாதம் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x