

வங்கதேசத்தில் நாளை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசு ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். 5 வாக்குப்பதிவு மையங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தினஜ்பூர் மாவட்டம் ஹகிம்பூர் நகரில் வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரி மீது முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) மற்றும் அதன் தோழமைக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமியின் தொண்டர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதனால் தீப்பிடித்து எரிந்த அந்த லாரி கவிழ்ந்ததுடன் அதில் இருந்த ஓட்டுநரும் வர்த்தகரும் இறந்தனர்" என்றார்.
தலைநகர் டாக்காவின் பரிபாக் பகுதியில் பேருந்து மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் ஒரு பெண் உள்பட தீக்காயம் ஏற்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
மேலும் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் சொந்த ஊரான பெனியில் தகன்புயன் பகுதியில் உள்ள 4 பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த 5 வாக்குப்பதிவு மையங்களுக்கு தீ வைக்கப்பட்டது. வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை 10-வது பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி, இடைக்கால அரசின் தலைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பிஎன்பி தலைமையிலான 18 எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி சார்பில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஹசீனா அரசின் கீழ் தேர்தல் நடைபெற்றால் முறைகேடு நடைபெற வாய்ப்பு இருப்பதாகக் கூறி பிஎன்பி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இதனால் மொத்தம் உள்ள 300 தொகுதிகளில் 153-ல் வேட்பு மனு தாக்கல் செய்த ஆளும் கட்சியினர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மீதம் உள்ள 147 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.