அரசு பணத்தில் பாலியல் விடுதியில் உல்லாசம்: ஜப்பான் அமைச்சர் மீது புகார்

அரசு பணத்தில் பாலியல் விடுதியில் உல்லாசம்: ஜப்பான் அமைச்சர் மீது புகார்
Updated on
1 min read

ஜப்பானில் பிரதமர் ஷின்ஷோ அபே தலைமையிலான அரசுக்கு சோதனை மேல் சோதனை தொடர்கிறது. அண்மையில் இரு முக்கிய அமைச்சர்கள் நிதிமுறைகேடு காரணமாக தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிதாகப் பொறுப்பேற்ற அமைச்சர் அரசு பணத்தை ‘செக்ஸ் பாரி’ல் செலவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

தொழிற்துறை அமைச்சர் யோய்சி மியாஸவா, ஹிரோஷி மாவிலுள்ள செக்ஸ் விடுதியில் அரசு பணத்தைச் செலவிட்டு உல்லாசமாக இருந்ததாகப் புகார் எழுந்துள்ளது. அவரது அமைச்சரவை அதிகாரிகளும் அதே விடுதியில் அரசு பணத்தில் உல்லாசமாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மட்டும்தான்

ஆனால், செக்ஸ் பாரில் அரசு பணத்தில் உல்லாசமாக இருந்தது நானில்லை. அதிகாரிகள் மட்டும் தான் என அமைச்சர் யோய்சி மியாஸவா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, “கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்பகுதிக்குச் சென்ற போது எனது அலுவலக அதிகாரிகள் சிலர் 18,230 யென்களை (சுமார் ரூ.10,000) பொழுதுபோக்குச் செலவினம் என கணக்கு காட்டியிருந்தனர். அது உண்மைதான். ஆனால், அந்த செக்ஸ் விடுதிக்கு நான் செல்லவில்லை” எனத் தெரிவித்தார். அமைச்சரவைச் செயலர் யோஹிஷிடே சுகா கூறும்போது, “அமைச்சர் மியாஸவா இப்பிரச்சினையை உரிய முறையில் கையாளுவார்” எனத் தெரிவித்தார்.

இரு ராஜினாமா

பிரதமர் ஷின்ஷோ அபே அமைச்சரவையில் வர்த்தகத் துறை அமைச்சர் யுகோ ஒபுச்சி, நீதித்துறை அமைச்சர் மிடோரி மிட்ஸுஷிமா ஆகிய இரு பெண் அமைச்சர்களும் தேர்தல் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் பதவி விலகினர். யுகோ ஒபுச்சிக்குப் பதிலாக அத்துறைக்கு கடந்த செவ்வாய்க்கிழமைதான் யோய்சி மியாஸவா பொறுப்பேற்றார். அவர் மீதும் ஊழல் புகார் எழுந்துள்ளதால், பிரதமர் ஷின்ஷோ அபே அரசுக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in