உலக மசாலா: உதாரண மனிதர் வாங் என்லினுக்கு வந்தனம்!

உலக மசாலா: உதாரண மனிதர் வாங் என்லினுக்கு வந்தனம்!
Updated on
2 min read

சீனாவின் யுஷுடன் கிராமத்தில் வசித்துவரும் வாங் என்லின் மூன்றாம் வகுப்பு படித்தவர். 2001-ம் ஆண்டு கிராமத்திலுள்ள விளைநிலங்களில் நச்சுக் கழிவுகளும் நச்சு நீரும் கொட்டப்பட்டன. அருகில் இருந்த கிவா ரசாயன நிறுவனம் தான் இந்த வேலையைச் செய்திருக்கிறது என்பதைக் கண்டுகொண்டார் வாங். உடனே கடிதம் எழுதி, அரசு சூழல் மாசு துறையிடம் புகார் அளித்தார். ஆனால் அந்த அரசாங்க அதிகாரிகள் நிறுவனத்துடன் சமரசம் செய்துகொண்டு, புகாரை கிடப்பில் போட்டுவிட்டனர். தொடர்ந்து நச்சுக் கழிவுகளைக் கொட்டிக்கொண்டேயிருந்தது நிறுவனம். வாங் என்லின் புகார்கள் அளித்தார். சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டார். சாட்சிகளை அளித்தார். எது ஒன்றும் நிறுவனத்தின் செயல்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக்கொண்டு, நிறுவனம் எளிதாகத் தப்பித்துக்கொண்டிருந்தது. சிறந்த வழக்கறிஞரை வைத்து வாதாடலாம் என்றால் அவருக்குச் செலவு செய்வதற்கு வாங்குக்கும் கிராமத்து மக்களுக்கும் வசதி இல்லை. எல்லோரும் விவசாயிகள் என்பதால் விளைநிலங்கள் வீணாவதையும் தண்ணீர் மாசு அடைவதையும் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்கவும் முடியவில்லை. தானே சட்டம் பயில முடிவுசெய்தார் வாங். நகரத்தில் இருந்த புத்தகக் கடையில் ஒரு கூடை சோளக் கதிர்களைக் கொடுத்துவிட்டு, சட்டப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தார். புரியாத விஷயங்களைப் படித்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். முக்கியமான விஷயங்களைக் குறிப்பு எடுத்துக்கொண்டார். நச்சுக் கழிவால் விளைநிலம் பாழாவதை, அவ்வப்போது பரிசோதனை செய்து, முடிவுகளைச் சேகரித்துக்கொண்டார். தானே படித்துப் படித்து சட்ட நுணுக்கங்கள் அனைத்தும் தெரிந்துகொண்டார். நடுவில் சில தடவை வழக்கு தொடுத்தார். ஆனால் அந்த வழக்கிலிருந்து ரசாயன நிறுவனம் எளிதில் வெளியில் வந்துவிட்டது. தான் படிப்பதை இன்னும் தீவிரமாக்கினார். சட்டத்திலிருந்து தப்பிக்க இயலாத அளவுக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைக் கண்டுகொண்டார். 2015-ம் ஆண்டு மீண்டும் வழக்கு தொடுத்தார். இந்தமுறை ரசாயன நிறுவனத்தின் மீது குற்றம் நிரூபணமானது. ஒவ்வோர் ஆண்டும் 20 ஆயிரம் டன்கள் ரசாயனக் கழிவுகளை 70 ஏக்கர் நிலப்பரப்பில் கொட்டி வந்ததை ஆதாரத்துடன் நிரூபித்தார் வாங். நீதிமன்றம் ரசாயன நிறுவனத்தைக் கண்டித்ததோடு, 82 லட்சம் ரூபாயை கிராமத்து மக்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் கழிவுகளை முற்றிலும் அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது. “வழக்கில் வென்றது மகிழ்ச்சிதான். ஆனால் இந்த 16 வருடங்களில் நிலமும் நீரும் விஷமாக மாறிவிட்டதே… அதை என்ன செய்யப் போகிறோம்?” என்று கேட்கிறார் வாங் என்லின்.

அடக் கொடுமையே…

ஜெர்மனியில் தெருவில் வசிக்கும் மனிதர் ஒருவருக்குப் பல் வலி. மருத்துவரிடம் செல்வதற்குப் பணம் இல்லாததால், அந்த வழியே வந்த துப்புரவு பணியாளர் ஒருவரின் உதவியை நாடினார். அவர் தன்னிடமிருந்த கட்டிங் ப்ளையரில் பல்லை எடுப்பதாகச் சொன்னார். ஒரு கையில் சிகரெட்டை வைத்துக்கொண்டு, பல்லைக் காட்டினார் அந்த மனிதர். சில நிமிடங்களில் கட்டிங் ப்ளையரால் பல்லைப் பிடுங்கிவிட்டார் துப்புரவு பணியாளர். இந்த வீடியோ உலகம் முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in