Published : 24 May 2017 12:16 PM
Last Updated : 24 May 2017 12:16 PM

உலக மசாலா: கரித்துண்டு காபி!

உலகிலேயே மிக வித்தியாசமான காபி இந்தோனேசியாவின் யோகியாகர்டா நகரில் கிடைக்கிறது. இங்கே காபியில் ஓர் எரியும் கரித்துண்டைச் சேர்த்து, ‘கோப்பி ஜோஸ்’ என்ற பெயரில் வழங்குகிறார்கள். 1960-ம் ஆண்டு காபி கடை உரிமையாளர் மான் வித்தியாசமான இந்தக் காபியை உருவாக்கினார். வயிற்றுப் பிரச்சினைகளால் துன்பப்பட்டுக்கொண்டிருந்தவர், காபியில் எரியும் கரித்துண்டைச் சேர்த்துப் பருகினார். இவருடைய வயிற்றுப் பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் குணமாயின. தான் அடைந்த பலனை, மற்றவர்களும் அடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கரித்துண்டு காபியை விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

மான் மறைந்த பிறகு, காபி கடையின் இன்றைய உரிமையாளர் அலெக்ஸ் கரித்துண்டு காபியைப் பிரபலப்படுத்த ஆரம்பித்தார். “எல்லோராலும் இந்தக் காபியை விரும்ப முடியும் என்று சொல்ல முடியாது. தைரியமானவர்களும் வயிற்றுப் பிரச்சினைகள் தீரவேண்டும் என்று நினைப்பவர்களும் எங்கள் காபியை விரும்பிக் குடிக்கிறார்கள். இன்று எங்கள் கடையின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள்தான். மான் இந்தக் காபியைப் பெரிய அளவில் கொண்டு செல்லவில்லை. நான் கரித்துண்டு காபி குடிப்பதால் ஏற்படும் மருத்துவப் பலன்களை எடுத்துச் சொல்கிறேன். அதனால் பலரும் குடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

வீக்கம், குமட்டல், நெஞ்செரிச்சல், வயிற்றுப் போக்கு போன்ற வயிறு தொடர்பான பல பிரச்சினைகளை இந்தக் காபி தீர்த்து வைக்கிறது. 4 ஸ்பூன் சர்க்கரையில் ஒரு தம்ளர் கொதிக்கும் நீரை ஊற்றி, காபித் தூளைக் கலந்து, எரியும் கரித்துண்டைச் சேர்த்தால் கோப்பி ஜோஸ் தயார். கரித்துண்டில் உள்ள நெருப்பு அணைந்த பிறகு, அதை எடுத்து வெளியில் போட்டுவிட்டு, காபியைப் பருகலாம். சாதாரண காபியை விட கரித்துண்டு காபியில் காஃபீன் அளவு குறைவாக இருக்கும். காஃபீனைக் கரித்துண்டு உறிஞ்சிக்கொள்வதால் வயிற்றுக்கு எந்தவிதத் தீங்கும் விளைவிக்காத காபியாக இது கருதப்படுகிறது. சிலர் சாதாரண காபிக்கும் கரித்துண்டு காபிக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்கிறார்கள். சிலர் கேரமல் சுவை தெரிவதாகச் சொல்கிறார்கள். ஒரு காபியின் விலை 20 ரூபாய்” என்கிறார் அலெக்ஸ்.

வயிற்றுப் பிரச்சினைகளைக் குணமாக்கும் கரித்துண்டு காபி!

மாடல் சென்யா ஜாரிட்சினாவின் கணவர் அலெக்சி ஷாபோவாலோவ், ரஷ்யத் தொழிலதிபர். திருமண வாழ்க்கையின் ஐந்தாவது ஆண்டு கொண்டாட்டத்துக்காகத் தன் மனைவிக்கு 70 காரட் வைர மோதிரம் ஒன்றைப் பரிசாக அளித்திருக்கிறார். இதன் மதிப்பு சுமார் 58.7 கோடி ரூபாய். “எனக்குப் பரிசுகள் அளிப்பதில் ஒருநாளும் கணவர் கஞ்சத்தனமாக இருந்ததில்லை. சாதாரண நகைகளோ, 30 காரட் வைரமோ எனக்குப் போதாதென்று 70 காரட் வைர மோதிரத்தைப் பரிசாக அளித்திருக்கிறார்!” என்று சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார் சென்யா. இந்த ஜோடி துபாயிலும் ரஷ்யாவிலும் வசித்து வருகிறது.

ஆடம்பரமான பரிசு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x