

தாய்லாந்து நாடாளுமன்றத் தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரி அரசியல் சாசன நீதி மன்றத்தை அணுகப்போவதாக பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்தில் பிரதமர் யின்லக் ஷினவத்ரா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அரசியல் சாராத குழுவிடம் ஆட்சி நிர்வாகத்தை ஒப்படைத்து, அதன் தலைமையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியது. இது தொடர்பாக அரசு எதிர்ப்பாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அக்கோரிக்கையை நிராகரித்த பிரதமர் யிங்லக் ஷினவத்ரா, திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.
அதன்படி கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆனால், எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக 45 தொகுதிகளில் வாக்குப் பதிவு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் எதிர்க்கட்சியினர் புறக்கணித்த இந்த தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக ஜனநாயகக் கட்சியின துணைத் தலைவர் ஓங்கார்ட் லாம்பய்பூன் கூறியதாவது: “இந்த தேர்தலை செல்லாது என அறிவிக்குமாறு அரசியல் சாசன நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளோம். அது தொடர்பான ஆதாரங்களை திரட்டி வருகிறோம்” என்றார்.
எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக மொத்தமுள்ள 4 கோடியே 87 லட்சம் வாக்காளர் களில் 1 கோடியே 20 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. எதிர்க்கட்சி களின் தேர்தல் புறக்கணிப்பு, அரசு எதிர்ப்பாளர்களின் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால், அரசியல் சாசன நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டால் தேர்தலை செல்லாது என அறிவிக்க வாய்ப்பிரு ப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே தேர்தல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சி னைகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் முக்கிய ஆலோச னைகளை நடத்தி வருகின்றனர்.
பிரதமருக்கு எதிராக போராட்டம்
நாடாளுமன்றத்தைக் கலைத்த பிறகு காபந்து அரசின் பிரதமராக உள்ள யிங்லக் ஷினவத்ரா, பாதுகாப்புத் துறை அமைச்சக மூத்த அதிகாரி நிபாத் தோங்லேயின் அலுவலகத்தில் அமர்ந்து அரசு நிர்வாகப் பணியை கவனித்து வருகிறார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, தலைநகர் பாங்காக்கில் உள்ள அந்த அலுவலகத்தை எதிர்க்கட்சியினர் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். தற்காலிக அலுவலகமாக பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்குச் சொந்தமான கட்டிடத்தை யிங்லக் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.