

உலக இரசாயன ஆயுத தடுப்பு கண்காணிப்பு அமைப்பு (ஓபிசிடபிள்யூ) சிரியாவில் இதுவரையில் மேற்கொண்டுள்ள ரசாயன அழிப்பு நடவடிக்கைகள் மூலம் 49 சதவீத ரசாயன ஆயுத மூலப் பொருட்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.
ரசாயன ஆயுத தடுப்பு கண்காணிப்பு அமைப்பு (ஓபிசிடபிள்யூ) ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்பித்த அறிக்கையில், ” சிரியாவில் இருக்கும் ரசாயன ஆயுதங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியது, ரசாயன ஆயுதங்களை செய்வதற்கான மூலப் பொருட்களை பறிமுதல் செய்தது என 49 சதவீத ரசாயன ஆயுதங்கள் தற்போதைய நிலையில் அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏப்ரல் 13- ம் தேதிக்குள் சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் நீக்கப்பட்டுவிடும். மேலும் நெருங்க முடியாத அச்சம் நிறைந்த பகுதிகளில் உள்ள 53.6 சதவீத ரசாயன ஆயுதங்களை ஏப்ரல் 27- ம் தேதிக்குள் நீக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்க படுகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், அசாதை பதவி விலகும் படி வலியுறுத்தின. ஆனால், அசாத் மறுத்து விட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு, இந்த நாடுகள் ஆயுதங்களை வழங்கி உள் நாட்டு போருக்கு ஆதரவு அளித்தன.
சிரியாவில், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்து வந்த உள் நாட்டு போரில் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் நடத்தப்பட்ட சரீன் ரசாயன தாக்குதலை அடுத்து அங்கு ஓபிசிடபிள்யூ ரசாயன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடதக்கது.