

ஆஸ்திரேலியாவுடனான உறவின் மதிப்பை குறைத்துக் கொள்வதாக இந்தோனேசியா அறிவித்துள்ளது.
இந்தோனேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் மார்ட்டி நடாலேகாவா கூறுகையில், “இந்தோனேசியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான உறவை குறைத்துக் கொள்ளும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் செயல்பாடு, எண்ணம் (உளவுத் தகவல்களை சேகரித்தல்) ஆகியவற்றை அறிந்த பின்பே இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்” என்றார்.
இந்தோனேசிய அதிபரின் செல்போன் உரையாடலை ஆஸ்திரேலிய உளவுத் துறை ஒட்டுக் கேட்டதாக தகவல் வெளியானது. அமெரிக்க உளவுத் துறை முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென் வெளியிட்ட ரகசிய ஆவணங்களின் மூலம் இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இந்தோனேசியா கோரியது. ஆனால், அதை ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட் நிராகரித்துவிட்டார்.
ஏபிசி நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், உளவுத் தகவல்கள் சேகரிப்பு விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையை இந்தோனேசிய அதிபர் சுசிலோ பாம்பாங் யுதோயானோ ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டியூகு பைஸாசியா கூறுகையில், “இந்தப் பிரச்சினையை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுடனான பல்வேறு ஒப்பந்தங்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. எங்களுக்குத் தேவை ஆஸ்திரேலியாவிடமிருந்து விளக்கம். உள்ளூர் அரசியலை அனுசரித்து கூறப்படும் பேச்சுகள் அல்ல. விளக்கத்தை விரைவாக அளித்துவிட்டால், பிரச்சினை உடனடியாக முடிவுக்கு வரும். ” என்றார். - பி.டி.ஐ.