

சிறுபான்மைக் குழுவினரின் உரிமைகளை பாதுகாக்கத் தவறியதாக புகார் தெரிவித்து மலேசிய அமைச்சரவையிலிருந்து விலகினார் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவரான பி.வேதமூர்த்தி.
இந்து உரிமைகள் நடவடிக்கை குழுவின் (ஹிண்ட்ராப்) தலைவரான இவர் பிரதமர் இலாகா துணை அமைச்சர் பதவியிலிருந்து திங்கள்கிழமை விலகினார். மலேசியாவில் சுமார் 10 லட்சத்துக்கும் மேலாக இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களின் ஆதரவை அரசு இழந்து வருகிறது. இந்த சரிவை தடுக்க அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு இது பின்னடைவு என கருதப்படுகிறது.
பிரதமர் நாஜிப் ரஸாக்கை வேதமூர்த்தி சந்திக்கவில்லை. வேதமூர்த்தியின் அலுவலக அதிகாரி மூலமாக ராஜினாமா கடிதம் ஒப்படைக்கப்பட்டது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
2013 மே 5 ம் தேதி பொதுத்தேர்தலுக்கு முன்னர் செய்துகொண்ட உடன்படிக்கைப் படி சிறுபான்மையினர் உரிமை களை பாதுகாக்க அரசு தவறி விட்டதே வேதமூர்த்தியின் ராஜினாமாவுக்கு காரணம் என ஹிண்ட்ராப் செயலர் பி.ரமேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
‘சிறுபான்மை பிரிவினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்கிற நம்பிக்கை அறவே இல்லை. 8 மாதங்களாகப் போராடினோம். ஏமாற்றமே மிஞ்சியது. அரசு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது’ என குற்றம்சாட்டியுள்ளார் ரமேஷ். ‘தேவையின்றி மலேசியா வாழ் இந்தியர்களுக்கு நம்பிக்கை கொடுத்தோம். அதற்காக மன்னிப்பு கோருகிறோம். இப்போது இந்த போராட்டத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது ஹிண்ட்ராப்’ என அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு வேத மூர்த்திக்கு அமைச்சர் பதவி கிடைத்தது பத்திரிகைகளில் முக்கியச் செய்தி யாக இடம்பிடித்தது.
இந்திய வம்சாவளியினர் ஆதரவை திரட்டும் நஜீப்பின் நோக்கத்தை அது பிரதிபலித்தது. 2.8 கோடி மக்கள் தொகை கொண்ட மலேசியாவில் 8 சதவீதம் பேர் இந்தியர்கள்.
இதனிடையே, இந்திய வம்சாவளியினரின் உரிமைகளை அரசு பாதுகாக்கவில்லை என்ற புகாருக்கு பிரதமரும் அவரது அரசும் விளக்கம் அளிக்கவேண்டும் என்று பொதுக்கொள்கை உயராய்வு மையத்தின் தலைவர் ராமன் நவரத்தினம் வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரம் பல மாதங்கள் ஆட்சியில் இருந்துவிட்டு இப்போது வேதமூர்த்தி பதவி விலகுவது ஏன் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.