

நீண்ட இழுபறிக்குப் பின் எப்-35ஏ லைட்னிங்-2 போர் விமானம், களத்தை சந்திக்க தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க விமானப்படை அறிவித்துள்ளது.
இதற்காக அமெரிக்க விமானப் படைக்கு பாராட்டு தெரிவித்துள்ள அந்நாட்டு ராணுவ அமைச்சர் ஆஷ்டன் கார்டர், ‘அமெரிக்க தனது வான் படைகளின் மேன்மைத் திறனை இதன் மூலம் தக்கவைத்துக் கொண்டுள்ளது’ என்றார்.
5-ம் தலைமுறை போர் விமான மான எப்35ஏ ரக விமானங்களை அமெரிக்கா தனது விமானப் படையில் அண்மையில் சேர்த்தது. 15 ஆண்டுகளுக்கு முன்பே, லாக்ஹீட் மார்டின் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்துகொண்டது.
ஆனால், பல்வேறு காரணங் களால் ஒப்பந்தம் நிறைவேறாமல் இருந்தது. தொழில்நுட்ப ரீதியான மேம்பாடுகள் மற்றும் கூடுதல் செலவினங்களுக்கான நாடாளு மன்ற ஒப்புதல் போன்றவற்றைக் கடந்து, இரு மாதங்களுக்கு முன், முதல்கட்டமாக 12 முதல் 24 வரையிலான விமானங்களை லாக்ஹீட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது.
சோதனைக்குப் பின், உடாவில் உள்ள ஹில் விமானப்படைத் தளத்தில், 388- விமானப்படையணி யில், 34-வது போர் விமானப் பிரிவில் சேர்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, எப்-35 ஏ போர் விமானங் கள் தயார் நிலையில் இருப்பதாக, அமெரிக்க விமானப்படை நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.