

ஓமனிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிக்கு 'மெர்ஸ்' நோய் பாதிப்பு இருப்பதை உறுதி செய்ததாக தாய்லாந்து சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வந்த நபரை பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு 'மெர்ஸ்' (மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய மூச்சுத்திணறல் நோய்) இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
75 வயது மிக்க அந்த நபர் ஓமனிலிருந்து சுற்றுலாவுக்காக பேங்காக் வந்தவர் ஆவார். இதனை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கையை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் அங்கு நோய் பீதி ஏற்பட்டுள்ளது.
நாட்டின் மிக பிரபலமான மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட நபர் இருக்கும் நிலையில், அவருடன் இருந்த அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர் மூன்று பேர் மற்றும் இருவருக்கும் நோய் அறிகுறி இருப்பதனால் அவர்களுக்கு தனித்தனியே சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
மருத்துவ கண்காணிப்பில் 141 பேர்
இதனிடையே 141 பேருக்கு பல்வேறு விதமான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்களை கண்காணிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இவர்களில் 75 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ரஜாதா தெரிவித்தார்.
தாய்லாந்தில் இருக்கும் உலக சுகாதார அமைச்சகமும் அந்நாட்டு அதிகாரிகளுக்கு நிலைமையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உதவி வருகின்றனர்.