Published : 16 Jul 2014 10:33 AM
Last Updated : 16 Jul 2014 10:33 AM

பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி தொடக்கம்: முதல் 5 ஆண்டுகளுக்கு இந்தியா தலைமை

பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் 'புதிய வளர்ச்சி வங்கி'யை நேற்று (செவ்வாய் கிழமை) தொடங்கி வைத்தனர். முதல் 5 ஆண்டுகளுக்கு இந்த வளர்ச்சி வங்கியை இந்தியா தலைமை ஏற்று நடத்துகிறது.

இதன் முதல் சி.இ.ஓ.,வாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்படுவார் என வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சையது அகபருதீன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸின் 6-வது உச்சி மாநாடு பிரேசிலின் ில் ஃபோட்லெசா, பிரேசிலியா நகரங்களில் நடைபெறுகிறது. 15-ம் தேதி தொடங்கிய மாநாட்டின் ஒரு பகுதியாக 'புதிய வளர்ச்சி வங்கி' தொடங்குவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பானின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. எனவே இந்த பன்னாட்டு நிதி அமைப்புகளுக்கு போட்டியாக பிரிக்ஸ் கூட்டமைப்பு சார்பில் புதிய சர்வதேச வங்கி தொடங்க 2013-ம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது.

அந்த தீர்மானத்தை விரிவாக ஆலோசித்த பிரிக்ஸ் தலைவர்கள் புதிய வளர்ச்சி வங்கியை தொடங்குவதாக முடிவு எடுத்தனர்.

அதன்படி, 6-வது பிரிக்ஸ் மாநாட்டில் ஃபோட்லெசா பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய வளர்ச்சி வங்கி நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வளர்ச்சி வங்கி தொடக்கம், மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை மாற்றியமைக்கும் முயற்சியாக 'வளர்ச்சி வங்கி' தொடக்கம் அமையும் என பிரிக்ஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய வளர்ச்சி வங்கி 100 பில்லியன் அமெரிக்க டாலர் துவக்க முதலீட்டுடன் நிர்வகிக்கப்படும். ஆரம்ப உறுப்பின மூலதனம் ஐயாயிரம் கோடி அமெரிக்க டாலராகும். இதனை அனைத்து பிரிக்ஸ் உறுப்பினர்களும் சமமாக பகிர்ந்துகொள்ளவர். இந்த புதிய வளர்ச்சி வங்கியின் முதல் தலைவர் இந்தியாவைச் சேர்ந்தவராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வங்கியின் தலைமையகம் ஷங்காயில் இருக்கும். ஆளுநர்கள் குழுவின் முதல் தலைவர் ரஷ்யாவை சேர்ந்தவராக இருப்பார். பிரிக்ஸ் நாடுகள், பிற வளரும் நாடுகளின் உள் கட்டமைப்பு மற்றம் நிலையான வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான வளங்களை திரட்டுவதே இந்த வங்கியின் நோக்கமாகும்.

'புதிய வளர்ச்சி வங்கி', தொடங்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கு கிடைத்துள்ள வெற்றியாக காணப்படுகிறது. 'புதிய வளர்ச்சி வங்கி' என்ற பெயர் பிரதமர் நரேந்திர மோடியால் சூட்டப்பட்டுள்ளது மற்றுமொரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

புதிய வளார்ச்சி வங்கியில், பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் சரிசமமாக முதலீடு செய்து 50 பில்லியன் டாலர் பணத்தை முதலீடாக வைக்கவுள்ளன.

முன்னதாக, சீனா பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் தங்களது பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு முதலீட்டுக்கு பணம் அளிக்கலாம் என யோசனை தெரிவித்திருந்தது. எந்த நாடு அதிகம் பணம் முதலீடு செய்கிறதோ அந்த நாடு வங்கியின் செயல்பாடுகளை நிர்வகிப்பதில் கூடுதல் அதிகாரம் கொள்ளும் எனவும் தெரிவித்திருந்தது.

இதனால் ஏகாதிபத்தியம் மேலோங்கும் என்பதால் மற்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், சீனாவின் யோசனையை முறியடித்து புதிய வளர்ச்சி வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

மோடி கருத்து:

பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கப்பட்டுள்ளது ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும். 2012-ல் டெல்லியில் எடுக்கப்பட்ட முயற்சி இப்போது சாத்தியமாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x