

ரம்ஜான் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், சவுதி அரேபியாவின் மெதினா மசூதி உட்பட 3 இடங்களில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாயினர்.
முஸ்லிம்களின் 2-வது புனிதத் தலமாகக் கருதப்படும் மெதினா நகரில் உள்ள மசூதியில் திங்கள் கிழமை மாலை தொழுகை நடைபெற்றது. அப்போது மசூதிக்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தை நோக்கி ஒருவர் வந்துள்ளார்.
பாதுகாப்புப் படையினர் அவரை தடுத்து நிறுத்த முயன்ற போது, அவர் தனது உடலில் கட்டி வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இந்தத் தாக்குதலில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாயினர். மேலும் 5 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலை நடத்தியவர் பாகிஸ் தானைச் சேர்ந்த அப்துல்லா கல்சர் கான் (34) என தெரியவந்துள்ளது. 12 ஆண்டுக்கு முன்பு சவுதிக்கு சென்ற இவர் ஜிட்டா நகரில் வசித்து வந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ஜிட்டா நகரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மற்றும் கிழக்கு சவுதி அரேபியா பகுதியில் உள்ள ஒரு மசூதி அருகே தற்கொலைப்படை தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தினர். எனினும், இதில் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை.
இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பல்வேறு அமைப்புகளும் உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், ரம்ஜான் மாதத்தில் தாக்குதல் நடத்துங்கள் என்று ஐஎஸ் அமைப்பு தனது ஆதரவாளர் களுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஆர்லாண்டோ, இஸ்தான்புல், பாக்தாத், டாக்கா உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த துப்பாக்கி அல்லது வெடிகுண்டு தாக்குதல் சம்பவங் களுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத் தக்கது.