

மலேசிய விமானம் எம்.எச்.370 நடுவானில் மாயமாகி 3 ஆண்டுகள் முடியப்போகும் நிலையில் பல்வேறு கணிப்புகளுடனேயே பெரிய புதிராக முடிந்து போயுள்ளது விமானத் தேடல் பணி.
மார்ச் 8, 2014, உலகை உலுக்கிய இந்தத் தினத்தில்தான் 239 பயணிகளுடன் மலேசிய விமானம் எம்.எச்.370 மாயமானது.
தேடுதல் குழுவினருக்கு விமானத்தின் சிறு சுவடு கூட கிடைக்கவில்லை, இதனால் வெறுப்பும் வியர்த்தமுமே எஞ்சிய நிலையில் தேடுதல் பணி அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் சுமார் 1,20,000 சதுரகிலோமீட்டர் பரப்பில் தேடுதல் வேட்டையை மேற்கொண்டது ஆஸ்திரேலியாவின் இணை ஒருங்கிணைப்பு மையம். ஆஸ்திரேலியாவுக்கு மேற்கே ஆழ்கடலில் 160 மில்லியன் டாலர்கள் செலவின தேடுதல் பணியை இந்த முகமைதான் தலைமையேற்று நடத்தியது.
ஆனால், “அனைத்து அறிவியல் சாதனங்களுடனும் உயர் தொழில்நுட்பங்களுடனும் விமானத்தை தேடும் பணியை மேற்கொண்டோம். இதற்காக இந்தத் துறையின் அசைக்க முடியா நிபுணர்களின் உதவியையும் பெற்று தேடல் பணி மேற்கொண்டோம். ஆனாலும் விமானம் பற்றிய சுவட்டைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே கடலடி தேடல் வேட்டை முடித்துக் கொள்ளப்படுகிறது. இந்தக் கைவிடல் முடிவு எளிதாகவோ, வருத்தமின்றியோ எடுக்கப்பட்டதல்ல”என்று ஆஸ்திரேலிய முகமை வருத்தத்துடன் தெரிவித்துள்ளது.
விமான போக்குவரத்து, விபத்து வரலாற்றில் ஏகப்பட்ட செலவு இழுத்து விட்ட இந்த எம்.எச்.370 தேடல் வேட்டை விமானம் எங்கு விழுந்திருக்கும் என்பதை கணிக்கும் தொழில்நுட்பப் போதாமைகளால் கைவிடப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த டிசம்பர் மாதம் நிபுணர்கள் குழு அளித்த புதிய தகவல்களின் படி அப்போது தேடப்பட்டுக் கொண்டிருக்கும் பகுதியிலிருந்து 25,000 கிமீ நேர் வடக்கே விமானம் விழுந்திருக்கலாம் என்று கூறியது. ஆனால் ஆஸ்திரேலியா இந்தத் தகவலின் துல்லியத்தை சந்தேகித்து அங்கு தேடுதல் வேட்டை நீட்டிக்கப்படவில்லை.
ஆனால் மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா நாட்டு அமைச்சர்கள், தேடல் குழுவினரை பாராட்டியதோடு, “விமானம் பற்றிய புதிய தகவல் எதிர்காலத்தில் கிடைக்கும் என்று உறுதியான நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம், அப்போது நிச்சயம் விமானத்தின் புதிர் அவிழ்க்கப்படும்” என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் தனியார் யாராவது முன் வந்து தேடுதலைத் தொடரலாம் அல்லது மலேசிய அரசு இதனை தொடரலாம், ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் புரியாத புதிராகவே எம்.எச்.370 விமான மாயம் வரலாற்றில் நீடிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.