

சிரியாவில் உள்ள ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாதிகளை குறிவைத்து, ஈரானின் விமானப் படைத் தளத்தில் இருந்து ரஷ்ய சுகோய் ரக போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
தனது படைத் தளத்தை வெளிநாட்டு ராணுவம் பயன்படுத்த ஈரான் அனுமதிப்பது இதுவே முதல் முறை. ஈரானின் ஹமிதான் நகரத்துக்கு அருகில் உள்ள பகுதியில் இருந்து, ரஷ்யாவின் போர் விமானங்கள் மூலம், சிரியா வின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதி களைச் சேர்ந்த 3 மாகாணங்களை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கிடையே, சிரியாவின் வடக்கு நகரமான அலிப்போவில் கிளர்ச்சியாளர்கள் தங்கியிருந்த பகுதியில் கடந்த செவ்வாய்க் கிழமை நடத்தப்பட்ட வான் தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை நடத்தியது ரஷ்ய படையினரா அல்லது சிரியாவின் விமானப் படையா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
எனினும், ரஷ்யா ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், சுகோய் ரக எஸ்யு-34 மற்றும் டியு22எம்3 போர் விமானங்கள் மூலம் அலிப்போ, டெயிர் எல்-சார் மற்றும் இட்லிப் ஆகிய இடங்களை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில், ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் நஸ்ரா தீவிரவாத அமைப் புக்கு சொந்தமான ஆயுதக் கிடங்கு கள், பயிற்சி முகாம்கள் அழிக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஈரானின் ஹமிதான் நகருக்கு வடக்கே 50 கிமீ தொலைவில் ஷாகித் நோஜா விமானப் படைத் தளம் உள்ளது. இந்த தளத்தையே ரஷ்யா பயன்படுத்துவதாக தெரிகிறது. 4,752 சதுர மீட்டர் பரப்பளவில், விசாலமான ஓடுதளம், போர் விமான நிறுத்துமிடம் மற்றும் பதுங்குகுழிகள் கொண்ட இந்த தளத்தில் ரஷ்ய போர் விமானங்கள் இருந்ததை கடந்த டிசம்பர் மாதமே அமெரிக்க நிறுவனம் ஒன்று, செயற்கைக் கோள் படத்துடன் சுட்டிக்காட்டியது.