மன்மோகன் புறக்கணிப்பால் பின்னடைவு இல்லை: இலங்கை கருத்து

மன்மோகன் புறக்கணிப்பால் பின்னடைவு இல்லை: இலங்கை கருத்து

Published on

கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் எடுத்துள்ள முடிவு பின்னடைவை ஏற்படுத்தாது என இலங்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் கூறும்போது, "உள்நாட்டு அரசியல் நிர்ப்பந்தங்க ளால்தான் மன்மோகன் சிங் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பதை இலங்கை புரிந்து கொள்கிறது. அவர் பங்கேற்காமல் இருப்பது மாநாட்டின் வெற்றியை பாதிக்காது. மாநாட்டுக்கு வரும்படி பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மன்மோகன் சிங் வந்தால் இலங்கை மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்" என்றார் பெரீஸ். இதனிடையே, மாநாட்டுக்கு வர முடியாது என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதம் அதிபர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது என்பதை இந்திய தூதரகம் உறுதி செய்தது. சிறு குறிப்பாக எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தில் மாநாட்டில் பங்கேற்காத தற்கான காரணங்கள் குறிப்பிடப்படவில்லை என்று இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமரின் கடிதம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை கூறியது: பிரதமர் மன்மோகன் சிங்கின் கடிதம் இந்தியத் தூதரகம் மூலம் இலங்கை அதிபரிடம் அளிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் தன்னால் நேரில் பங்கேற்க இயலவில்லை என்ற தகவலை அந்தக் கடிதத்தில் பிரதமர் தெரியப்படுத்தியுள்ளார். பிரதமருக்குப் பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பார். அவருடன் வெளியுறவுத் துறை செயலர் சுஜாதா சிங், கூடுதல் செயலர்கள் பவண் கபூர், நவ்தேஷ் சர்மா உள்ளிட்டோரும் மாநாட்டில் பங்கேற்பார்கள் இதுதொடர் பான ராஜ்ஜியரீதியிலான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ளன என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in