

சிரியாவில் உள்ள கான் ஷேய்க்கூன் நகரில் செவ்வாயன்று நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதலில் அப்துல் ஹமீது அல்யூசுப் என்பவரின் 9 மாத இரட்டையர் குழந்தைகள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் பலியாகியுள்ள பயங்கரம் நடந்துள்ளது.
9 மாத இரட்டைக் குழந்தையின் உயிரற்ற உடலை ஏந்திய படி அப்துல் ஹமீது யூசுப் ‘குட் பை சொல்லுங்கள் குட் பை சொல்லுங்கள்’ என்று கண்ணீருடன் மன்றாடிக் கொண்டிருந்த காட்சி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தன் இரட்டைக் குழந்தைகளை அவர் சுமந்து சென்று ரசாயனத் தாக்குதலில் பலியான தனது 22 குடும்ப உறுப்பினர்கள் புதைக்கப்பட்ட இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றார்.
செவ்வாயன்று நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதலில் 30 குழந்தைகள் 20 பெண்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளன. இவரது குடும்பத்தை சேர்ந்த அயா ஃபாதல் என்பவர் தனது 20 மாத குழந்தையை மார்பில் அணைத்த படி, தெருவைச் சூழ்ந்த ரசாயன நச்சிலிருந்து காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் ஓடி வந்தார். ஆனால் ஓடிவந்தவர் தன் குடும்ப உறுப்பினர்கள் உட்பட இறந்தவர்களின் உடல்களுடன் லாரி ஒன்று வந்ததைக் கண்டு அச்சத்தில் உறைந்து நின்று விட்டார். ‘நான் அவர்களை, என் உறவினர்களை பிணக்குவியலில் கண்டேன். அனைவரும் இப்போது இல்லை, நான் அவர்களைப் பார்த்து விட்டேன்’ என்று அழுது புலம்பினார்.
6 ஆண்டுகால சிவில் யுத்தத்தில் எதிரணியினர் பிடித்து வைத்திருக்கும் பகுதிகளில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சாவுகள் அந்த ஊர்களை முற்றிலும் அழித்து விட்டது.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் அதிபர் பஷார் ஆசாத் இருப்பதாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. ஆனால் சிரியாவின் ஆதரவு நாடு ரஷ்யா இதனை மறுத்துள்ளது.
ஃபாதல் ஏ.பி. செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “என் இருதயம் உடைந்து நொறுங்கி விட்டது. அனைத்தும் மிகப் பயங்கரமானவை. அனைவரும் அலறுகின்றனர், ஒருவரும் மூச்சு விட முடியவில்லை. நாங்கள் எத்தனையோ கடினப்பாடுகளை கண்டிருக்கிறோம். ஆனால் இதுதான் மிகவும் பயங்கரமானது” என்றார்.
2013-ம் ஆண்டு போராளிகள் பிடித்து வைத்திருந்த டமாஸ்கஸின் புறநகர் பகுதியான கவுத்தாவில் இதே போன்ற ரசாயனத் தாக்குதல்களுக்குப் பிறகு நரகத்தையொட்டிய காட்சிகள் அரங்கேறின, அப்போதும் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் இதன் பிறகு ரஷ்ய இடையீட்டில் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் ரசாயன ஆயுதங்களை ஒழித்து விட்டதாக அதிபர் அசாத் அறிவித்தார். ஆனால் ஓராண்டுக்குப் பிறகு குளோரின் வாயு பிரயோகத்தில் பலர் உயிரிழந்தனர்.
செவ்வாயன்று காலை 6.30 மணியளவில் 4 ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இது வழக்கமான தாக்குதல் இல்லை என்பது உடனடியாகப் புரிந்தது. 100 மீ தொலைவில் வெடித்த ராக்கெட்டுகளின் சப்தம் கேட்டு உறங்கிக் கொண்டிருந்த ஆலா யூசுப் மற்றும அவரது குடும்பத்தினர் தூக்கிவாரிப்போட்டு விழித்துக் கொண்டனர். முதலில் ஒரே புகை மண்டலம். முதலில் தந்தை வெளியே சென்று உடனேயே உள்ளே திரும்பியுள்ளார். புகை மண்டலத்தில் சிக்கிய ஒரு பெண் அந்த இடத்திலேயே மரணமடைந்ததை அவர் கண்டார். உடனடியாக பதற்றமடைந்த குடும்பத்தினர் எல்லா ஜன்னல்களையும் அவசரகதியில் மூடினர், ஆப்பிள் வினிக்கரில் தோய்த்த துணிகளை தங்கள் முகங்களில் மூடிக் கொண்டனர். ஆனால் காற்று வேறொரு திசையில் சென்றதால் தப்பினர்.
ஆனால் தாக்குதல் மையத்தில் சிக்கிய அல்யூசுப் குடும்பத்தினர் பலர் மடிந்தனர். இன்னும் சிலரைக் காணவில்லை அவர்களும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சுவதாக ஆலா அல்யூசுப் தெரிவித்தார்.