

மாயமான மலேசிய விமானம் நிமிடத்துக்கு 20 ஆயிரம் அடி என்ற வீதத்தில் அதிவேகத்தில் சென்று கடலுக்குள் மூழ்கியிருக்கலாம் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங் நோக்கி கடந்த 2014, மார்ச் 8-ம் தேதி 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசியாவின் எம்ஹெச்.370 விமானம் திடீரென மாயமானது. இந்தியப் பெருங்கடலில் விமானம் விழுந்து மூழ்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் அதில் இருந்த பயணிகள் அனைவரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் இதுவரை விமானத்தின் சிதைந்த பாகங்கள் கூடு கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனால் தவறான இடத்தில் விமானத்தை தேடி வந்ததாக ஆஸ்திரேலிய நிபுணர் குழு அறிவித்தது. இந்நிலையில், விமானம் அதிவேகத்தில் கடலுக்கு அடியில் சென்று மூழ்கியிருக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
விமானம் கடலில் விழுவதற்கு முன்பாக எரிபொருள் தீர்ந்திருந்தால், இன்ஜின்களில் தீப்பிடித்து, 35 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து நிமிடத்துக்கு 20 ஆயிரம் முதல் 12 ஆயிரம் அடி என்ற வீதத்தில் அதிவேகமாக கடலில் விழுந்திருக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானம் கடலில் விழுவதற்கு முன்பாக, இரு விமானிகளில் ஒருவர் அதை இயக்க முயற்சி எடுத்திருந்ததாலும் கூட தற்போது தேடப்பட்டு வரும் பகுதியில் இருந்து 1,20,000 சதுர கி.மீ வெளிப்பரப்பில் விழுந்திருக்கலாம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த வெளிப்புற பகுதியில் விமானத்தை தேட வேண்டும் என சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.