Published : 24 Jan 2014 11:17 AM
Last Updated : 24 Jan 2014 11:17 AM

சிரியா அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல்

சிரியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லாத நிலையே காணப்படுகிறது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் – அஸாத் தலைமையிலான ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஜெனீவாவில் பேச்சுவார்த்தைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்நாளான புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் சமரசம் ஏதும் ஏற்படவில்லை.

கிளர்ச்சியாளர்களை நம்பிக்கை துரோகிகள் என்றும், வெளிநாடுகளின் முகவர்கள் என்றும் விமர்சித்து வரும் சிரிய அரசு அதிகாரிகள், அதிபர் அஸாத் எக்காரணத்தை முன்னிட்டும் பதவி விலக மாட்டார் என்று கூறி வருகின்றனர். கிளர்ச்சியாளர்கள் தரப்பிலோ, அதிபர் அஸாத் பதவி விலக வேண்டும், போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த முக்கிய விவகாரத்தில் எழுந்துள்ள கருத்து வேறுபாட்டால், பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

இந்நிலையில், பேச்சுவார்த் தைக்கு ஏற்பாடு செய்த உலக நாடுகளின் பிரதிநிதிகள் கூறுகையில், “முதல் முறையாக இருதரப்பையும் பேச்சு வார்த்தையில் ஈடுபடுத்தியிருப்பதே சமரசம் ஏற்படுவதற்கான முதல் படியாக நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் சிரிய அரசு தரப்பில் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஓம்ரான் அல் – ஜோப்பி, வெளியுறவுத் துறை அமைச்சர் வாலித் முவால்லெம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிளர்ச்சியாளர்கள் தரப்பில் சிரிய தேசிய கூட்டணி தலைவர் அகமது ஜார்பா பங்கேற்றார்.

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கி – மூன் பேசுகையில், “போர் நிறுத்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று உலக மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுவரை போரிட்டது போதும். சமரசம் செய்து கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது” என்றார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகையில், “இடைக்கால அரசுக்கு பஷார் அல் – அஸாத் தலைமை ஏற்கக் கூடாது. சொந்த மக்கள் மீதே தாக்குதல் நடத்திய நபரை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தக் கூடாது” என்றார்.

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், “பேச்சுவார்த்தை எளிதாக இருக்கும் என்றும், விரைவாக முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால், இந்த வரலாற்று தருணத்தை இரு தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

போரை நிறுத்த அல் காய்தா வேண்டுகோள்

இதற்கிடையே சிரியா விவகாரம் தொடர்பாக அல் காய்தா தலைவர் அய்மான் அல் – ஜவாஹிரி தெரிவித்த கருத்துகள் இணையதளம் ஒன்றில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. அவர் கூறியுள்ளதாவது: சிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் அல் காய்தா தொடர்புடைய இயக்கங்களுக்கும், பிற எதிர்ப்பு இயக்கங்களுக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அனைவரும் இணைந்து ஒற்றுமையாக போராட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x