

உலக நாகரிக வளர்ச்சியிலும், அமெரிக்காவின் கலாச்சாரத்திலும் இந்து சமூகத்தினர் ஆற்றிய பங்களிப்பு அற்புதமானது எனக் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் அக்டோபர் 15 ஆம் தேதி இந்திய - அமெரிக்க நாடுகளை மையப்படுத்திய நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் அடிப்படை நோக்கம் உலகளவில் இஸ்லாமிய தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பயனடைய வேண்டும் என்பதே என டிரம்ப் தெரிவித்தார்.
இது குறித்து டிரம்ப் பேசும்போது, "இந்து சமூகத்தினர் உலக நாகரிக வளர்ச்சிக்கும், அமெரிக்காவின் நாகரிகத்துக்கு ஆற்றிய பங்களிப்பு அற்புதமானது. அவர்களது கடின உழைப்பு, குடும்ப உறவுகளில் அவர்கள் கொண்டுள்ள மதிப்புகள் போன்ற பண்புகள் கொண்டாடப்பட வேண்டும்.
அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் மூலம் இந்திய- அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளை வலுப்படுத்த உதவும்" என்றார்
அக்டோபர் 15 நிகழ்ச்சி தொடர்பாக அமெரிக்க மக்களுக்கு அழைப்பு விடுத்து 24 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்றையும் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "குடியரசு கட்சி மற்றும் இந்து மதக் கூட்டணி பங்கு பெறும் பேரணியில் பங்கு கொள்ள அனைவரையும் அழைப்பதில் மிக்க மகிழ்ச்சி" எனக் குறிப்பிட்டுள்ளார்.