பதற்றத்தில் ஆழ்த்திய பனாமா - 10

பதற்றத்தில் ஆழ்த்திய பனாமா - 10
Updated on
2 min read

பனாமா பேப்பர்ஸ் தகவல்கள் உண்டாககிய அதிர்வுகளின் பின்னணியைப் பார்த்தோம். அது தொடர்பான மேலும் பல அதிர்ச்சிகளும் உண்டு.

பனாமா பேப்பர்ஸ் ஆவணங்களில் வெளியான சில பெயர்கள் பலரும் அறிந்தவை.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இவர்களில் ஒருவர். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இராக்கின் முன்னாள் துணை அதிபர் ஐயத் அல்லாவி, எகிப்தின் முன்னாள் அதிபரின் மகன் அலாம் முபாரக் என்று தொடங்கி உக்ரைன் அதிபர், ஐஸ்லாந்து பிரதமர் என்று பட்டியல் நீள்கிறது. லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபி, கால்பந்து வீரர் மெஸ்ஸி ஆகிய பிரபலங்களும்கூட பனாமா பேப்பர்ஸ் தகவல்களில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

ஆண்டுக்கு இவ்வளவு தொகை என்று ஊதியம் பெற்றுக் கொண்டு தன் வாடிக்கையாளர்களின் சொத்துகளையும் நிதிகளையும் நிர்வகிக்கிறது பனாமாவில் உள்ள ஃபொன்செகா நிறுவனம். சுவிட்சர்லாந்து, சைப்ரஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் என்று பல இடங்களிலும் இது இயங்குகிறது.

பல பெயர்கள் வெளியாகியுள்ளன என்பதோடு தங்களுக்கு நெருங்கிய பினாமிகளின் பெயர்களிலும் இவர்களில் சிலர் செயல்படுகிறார்கள். சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்களாம். (இந்த சட்ட நிறுவனத்துக்கு மொத்தம் மூன்று லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கை யாளர்கள் உண்டு.) வாடிக்கையாளர் களிடமிருந்து கிடைக்கும் தொகையை உலகின் எந்தெந்த நாடுகளிலெல்லாம் எப்படி போட்டு வைத்தால் வரிகளிலிருந்து தப்பிக்கலாம் என்று ஆலோசனை அளிப் பதும் இந்த நிறுவனத்தின் முக்கிய வேலை.

2010-ல் விக்கி லீக்ஸ் வெளிப்படுத்திய தகவல்கள் அமெரிக்க அரசைக் கொந் தளிக்க வைத்தது. அமெரிக்க அரசு, அதன் ராணுவம், ஆயுதபேரங்கள் போன்ற பல ரகசியத் தகவல்கள் அப்போது வெளியாகி ஆட்சியில் இருப்பவர்களின் பிம்பங்கள் உடைந்தன. “இவ்வளவு ரகசியத் தகவல்கள் வெளியாகி இருக்கிறதே’’ என்று மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். இப்போது பனாமா பேப்பர்ஸ் அதைவிட அதிகமான தகவல்களை வெளிப்படுத்தி உள்ளன.

இந்த இடத்தில் சில கேள்விகள் எழலாம். வெளிநாடுகளில் முதலீடு செய்வதுதப்பா என்ன? முக்கியமாக வணிகர்களிடையே இது சகஜம்தானே! உள்நாட்டு கிரிமினல் களிடமிருந்து தங்கள் சேமிப்பை பாது காக்கும் விதத்தில்கூட இப்படிச் செய்ய லாமே. எங்கே வரி இல்லையோ அல்லது மிகக் குறைவோ அந்த நாடுகளில் முதலீடு செய்வதில் என்ன தவறு?

ஆனால் நடைமுறையில் பார்த்தால் இப்படிப்பட்ட நியாயமான காரணங்களுக் காக முதலீடு செய்வதைவிட, ஊழலில் பெற்ற பணத்தையும் கணக்கு காட்ட முடியாத பிற வகைகளில் பெற்ற தொகை யையும்தான் இப்படி முதலீடு செய்கிறார் கள். அதாவது சொந்த நாட்டின் வருமான வரி அதிகாரிகளுக்குத் தெரியாமல் வெளிநாட்டுக்குச் செல்கிறது இந்தப் பணம். அதற்கு ஒருவிதத்தில் இடைத்தரகர்போல ஃபொன்செகா போன்ற நிறுவனங்கள் செயல்படுகின்றன. “எங்கள் வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை நாங்கள் வெளியிட மாட்டோம். இது நியாயமான நிலைப்பாடுதான்’’ என்கிறது இந்த நிறுவனம். பின் எப்படி இவ்வளவு விவரங்கள் கசிந்தன? ஏதோ உள்குத்து வேலை நடந்துள்ளது. 1970-ல் இருந்து 2015 வரை உள்ள சில முக்கிய ஆவணங்கள்தான் கசிந்துள்ளன.

அரசியல் பிரபலங்கள், திரைப்படப் புள்ளிகள், விளையாட்டு வீரர்கள் என்று பலரும் தங்கள் கணக்கில் வராத சொத்து களை பனாமாவில் பதுக்கி வைத்ததும் அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததும் தகவல் களாக வெளியேறின.

இந்தியர்களின் பெயர்களும் நிறைய உள்ளன. சுமார் 500 பேர். அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். நிறுவனத்தின் தலைவர் குஷன் பால்சிங், கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, டெல்லியைச் சேர்ந்த லோக் சத்தா கட்சியின் முன்னாள் தலைவர் அனுராக் கேஜ்ரிவால் என்று இந்தப் பட்டியல் நீள்கிறது.

இப்போது தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களில் சிலரது பெயர்களும் அடிபடுவதால் பரபரப்பு கூடியிருக்கிறது. ஐஸ்லாந்துப் பிரதமர் சிக்மண்ட் டேவிட் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உண்டானது.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் தன் பங்கிற்கு விளக்கமளித்தார். அவரது தந்தைக்கு சட்ட விரோதமான வெளிநாட்டுப் பண முதலீடு இருந்ததாம். பஹாமாஸ் நாட்டின் ஒரு நிதி நிறுவனத்தில் அவர்கள் குடும்பம் 5000 பங்குகள் வாங்கி வைத்திருந்ததாம். “ஆனால் பிரதமராகப் பதவியேற்கும் முன்பே எனது பங்குகளை விற்றுவிட்டேன்’’ என்கிறார் கேமரூன்.

பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தை விசாரிக்க சிறப்பு நிபுணர் குழு ஒன்றை இந்திய நிதி அமைச்சர் அமைத்தார். இதில் நிதிப் புலனாய்வுப் பிரிவு, ரிசர்வ் வங்கி, வரி ஆராய்ச்சிப் பிரிவு போன்ற அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். மேல் விவரங்களும், விளைவுகளும் இனிதான் வெளியாக வேண்டும்.

பனாமா பேப்பர்ஸில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பெயர்கள் பின்னரும் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான், சீனா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளின் அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் செய்துள்ள வரி ஏய்ப்புகள் வெளியாகியுள்ளன.

ஆக பனாமா என்ற நாட்டின் பெயர் உலகின் அத்தனை நாடுகளிலும் இந்த விதத்தில் எதிரொலிக்கிறது. பனாமா அரசு பதைபதைப்புடன் “சட்டத்திற்குப் புறம்பான வழியில் எந்த நாட்டில் செயல்படவும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இந்த விஷயத்தில் பிற நாடுகளுடன் ஒத்துழைப்போம்’’ என்று கூறியிருக்கிறது.

(அடுத்து இந்தியரைத் தலைவராகக் கொண்டிருந்த நாடு)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in