யாழ்ப்பாணத்தில் கேமரூன்: துளிர்விடும் நம்பிக்கை!

யாழ்ப்பாணத்தில் கேமரூன்: துளிர்விடும் நம்பிக்கை!
Updated on
2 min read

பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் யாழ்ப்பாணம் வந்து சென்றது அப்பகுதி மக்களுக்கு புதிய உத்வேகத்தை தந்துள்ளது.

பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் இலங்கை வந்தவுடன் முதல் காரியமாக வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். கிட்டத்தட்ட 2 மணிநேரத்துக்கும் மேல் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றார். அவரது பயணம் யாழ்ப்பாணம் பகுதி மக்களுக்கு பெரு மகிழ்ச்சி தந்துள்ளது. அதே நேரத்தில் இலங்கை அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன், பலாலி விமான நிலையத்துக்கு அன்டனோவ் ரக விமானம் மூலம் வந்திறங்கினார். முதலில் ஹெலிகாப்டர் மூலம் யாழ்ப்பாணம் நகருக்குள் செல்வதாக இருந்தது. பின்னர் அந்தத் திட்டம் மாற்றப்பட்டது.

கார் மூலம் யாழ்ப்பாணம் பொது நூலகம் சென்றார். அங்கு வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரை சந்தித்து தற்போதைய வடக்கு மாகாண நிலவரங்களை கேட்டுத் தெரிந்துகொண்டார். அப்போது போர்க் காலத்தில் காணாமல் போய் இன்னமும் திரும்பாமல் இருப்போரின் குடும்பத்தினர் நூலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுடன் நூலகத்துக்கு வெளியே வந்த கேமரூன், இந்த ஆர்ப்பாட்டம் பற்றி முதல்வரிடம் கேட்டறிந்தார். அப்போது அதிர்ச்சி தெரிவித்த அவர், ''இந்த வேதனையை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை'' என முதல்வரிடம் கூறினார்.

பின்னர் கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் நாளிதழ் அலுவலகத்துக்கு கேமரூன் வந்தார். அங்கு, இலங்கை ராணுவத்தால் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி (தமிழ்ப் புத்தாண்டுக்கு முதல் நாள்) எரிக்கப்பட்ட அச்சிடும் எந்திரங்களைப் பார்வையிட்டார். இந்தச் சம்பவத்தின்போது ஒரு சில ஊழியர்களும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாளிதழின் நிர்வாக இயக்குநர் சரவணபவன், தலைமை ஆசிரியர் கானமயில்நாதன் ஆகியோரிடம் சம்பவத்துக்குக் காரணமான அம்சங்களை நாளிதழ் அலுவலகத்தில் தனி அறையில் அமர்ந்து கேமரூன் விசாரித்து அறிந்தார்.

பின்னர் உதயன் நாளிதழ் ஊழியர்கள் மத்தியில் பேசிய அவர், “அடிப்படை சுதந்திரத்தை இழக்க ஒருபோதும் பிரிட்டிஷ் சம்மதிக்காது. நாங்கள் தனிநபர் சுதந்திரத்தின் பக்கத்தில் நிற்கிறோம். இதோ எங்கள் தூதரக அதிகாரிகள் இங்கேதான் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொன்றையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கவலைப்படாதீர்கள்” என்றார்.

பிறகு, சபாபதிப் பிள்ளை நலன்புரி மையத்துக்கு கேமரூன் சென்றார். அங்கு ராணுவத்திடம் நிலங்களைப் பறிகொடுத்த மக்களைப் பார்த்து ஆறுதல் கூறினார். 23 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் நிலங்களைப் பறித்துக்கொண்ட ராணுவம் அவற்றைத் திரும்பத் தர வேண்டும் என அவர்கள் கேமரூனிடம் கோரிக்கை விடுத்தனர். பின்னர் பலாலி சென்ற கேமரூன், அங்கிருந்து கொழும்பு சென்றார்.

எதிரொலி

கேமரூன் வருகை குறித்து கருத்துத் தெரிவித்த உதயன் நாளிதழ் ஆசிரியர் கானமயில்நாதன், “நாங்கள் கேமரூன் வருகையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. இலங்கை அரசின் மீதான நிர்ப்பந்தமாகவே பார்க்கிறோம். ராணுவத்தால் நிலம் இழந்தவர்களுக்கு மீண்டும் நிலம் தரப்படவேண்டும். காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தர வேண்டும். மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும். அடிப்படையில் பத்திரிகை சுதந்திரம் தேவை. இவற்றுக்கான சர்வதேச குரலாக கேமரூனின் வார்த்தைகளை எடுத்துக்கொள்கிறோம்” என்றார்.

மற்றொரு பத்திரிகையாளரான திலீபன், “ கேமரூன் வருகை எங்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளது. இந்தியா செய்ய வேண்டியதை பிரிட்டிஷ் செய்துள்ளது. நிச்சயம் இந்த முறை இலங்கை அரசு ஓரளவுக்கேனும் எங்கள் மீது கரிசனம் காட்டும் என நம்புகிறோம். ராணுவத்தால் அபகரிக்கப்பட்ட நிலங்களையும் காணாமல் போனவர்களையும் திரும்பத் தந்தாலே போதும். நாங்கள் காலாகாலத்துக்கும் நன்றாக இருப்போம். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இதுபோல் வந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்போம். அல்லது காமன்வெல்த் மாநாட்டை மொத்தமாக இந்தியா புறக்கணித்திருக்க வேண்டும். இரண்டையுமே இந்தியா செய்யவில்லை” என்றார் உணர்ச்சி பொங்க.

யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் இல்லம் ஒன்றில் பொறுப்பாளராக இருக்கும் ஸ்டான்லி, “என்ன இருந்தாலும் வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான். இங்க ஒன்னச் சொல்லி அங்க ஒன்ன சொல்ல மாட்டான். சத்தியமா இந்த முறை பாருங்கோ... எல்லாம் நல்லதாகவே நடக்கும்” என்றார் கண்ணில் நீருடன்.

பிரிட்டிஷ் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தது இதுவே முதன்முறை. அதை விட கேமரூன் பார்வையிடுவதற்கு தமிழ் நாளிதழ் அலுவலகம் ஒன்றை இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் தேர்வு செய்தது மிக முக்கியமானது. இது இலங்கையில் உள்ள பத்திரிகை சுதந்திரம், தனிநபர் சுதந்திரம் தொடர்பான மேற்குலகின் பார்வையை காட்டுவதாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in