Published : 29 Jan 2017 04:39 PM
Last Updated : 29 Jan 2017 04:39 PM

முஸ்லிம் நாடுகளின் பயணிகளை வெளியேற்ற தடை: அமெரிக்க நீதிமன்றங்கள் உத்தரவு

ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகளை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றக்கூடாது என்று நியூயார்க், வெர்ஜினியா நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

சிரியாவைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவில் நுழைய நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு 120 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர சிரியா உட்பட மேற்குறிப்பிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு 90 நாட்களுக்கு விசா வழங்கக்கூடாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தடை உத்தரவு காரணமாக நியூயார்க், சிகாகோ உள்ளிட்ட அமெரிக்க விமான நிலையங்களில் நேற்று தரையிறங்கிய 300-க்கும் மேற்பட்டவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை மீண்டும் அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

இதை எதிர்த்து அமெரிக்க மனித உரிமை அமைப்பு சார்பில் நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி டோன்லே, 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள், பயணிகளை நாடு கடத்தக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.

இதேவிவகாரம் தொடர்பாக வெர்ஜினியா மாவட்ட நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, அடுத்த 7 நாட்களுக்கு அகதிகள், சுற்றுலா பயணிகளை வெளியேற்ற தடை விதித்து உத்தரவிட்டார்.

அமெரிக்க ஜனநாயகத்துக்கு நீதிமன்றங்கள் அரணாக இருக்கும் என்று நம்புவதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

வலுக்கும் போராட்டம்

இதனிடையே அமெரிக்கா முழுவதும் உள்ள விமான நிலையங்கள் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு அதிபர் ட்ரம்புக்கு எதிராக கோஷமிட்டனர். இந்தப் போராட்டம் வலுவடைந்து வருகிறது.

இதேபோல அமெரிக்காவில் வசிக்கும் மெக்ஸிகோ மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்களும் ட்ரம்புக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x