

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் எரிமலை ஒன்று ஞாயிற்றுக்கிழமை வெடித்ததால் அப்பகுதியிலிருந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர்.
இதுகுறித்து வடக்கு சுமத்ரா பேரிடர் முகமையின் தலைவர் அஸ்ரென் நசுஷன் கூறியதாவது:
சுமத்ரா தீவின் வடக்குப் பகுதியில் உள்ள கரோ மாவட்டத்தில் உள்ள சினபங் என்ற எரிமலை வெடித்து தீப்பிழம்பை கக்கி வருகிறது. இதனால் அப்பகுதி புகை மூட்டமாக காணப்படுகிறது. ஆங்காங்கே சாம்பல் பரவி வருவதுடன், அனல் காற்று வீசி வருகிறது.
இதனால் அந்த எரிமலையைச் சுற்றி 3 கிலோ மீட்டர் தொலைவில் வசித்து வந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறி விட்டனர். பாரம்பரிய கலாசார விழாக்களுக்காக பயன்படுத்தப்படும் 5 அரங்குகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இதுகுறித்து தேசிய பேரிடர் முகமையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இந்த எரிமலை இதற்கு முன்பு 2010 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வெடித்தது. அதன்பிறகு 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெடித்துள்ளது" என்றார்.
பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு நடுவே அமைந்துள்ள இந்தோனேசிய நிலப்பகுதி நெருப்பு வளையம் என அழைக்கப்படுகிறது. அதாவது இப்பகுதியில் பூகம்பம், எரிமலை வெடிப்பு ஆகியவை அடிக்கடி நிகழ வாய்ப்பு உள்ளது. இந்தோனேசியாவில் 10க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு நுசா டெங்கரா மாகாணத்தில் ஒரு சிறிய தீவில் உள்ள ஒரு எரிமலை கடந்த மாதம் வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.