Last Updated : 27 Dec, 2013 12:00 AM

 

Published : 27 Dec 2013 12:00 AM
Last Updated : 27 Dec 2013 12:00 AM

ஜனநாயகம் காக்கும் மாவோயிஸ்டுகள்

பன்னெடுங்கால மன்னராட்சி, தொடர்ச்சியான உள்நாட்டு யுத்தத்துக்குப் பிறகு 2008ம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அந்த தேசத்து மாவோயிஸ்டுகள் பெற்றது நம்பமுடியாத மாபெரும் வெற்றி. பிரசந்தா ஆட்சியமைத்த அழகை உலகமே வியந்து பார்த்தது.

அப்படித் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய நேபாளம் தான் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் வெறும் எண்பது சீட்டுகளை மாவோயிஸ்டுகளுக்குக் கொடுத்தது. என்னய்யா விளையாடு கிறீர்கள்? மொத்தமுள்ள 575 தொகுதிகளில் வெறும் எண்பதா? ஐந்து வருடங்களில் மாவோயிஸ்டுகளின் மானம் மரியாதை இத்தனை சரியுமா?அதெல்லாம் இல்லை. இது கடைந்தெடுத்த களவாணித்தனம். எங்களை ஒழித்துக்கட்டுவதை அஜெண்டாவாக வைத்துக் கொண்டு எல்லோரும் சேர்ந்து கள்ள ஆட்டம் ஆடியிருக்கிறார்கள். இது செல்லாது, செல்லாது. நாங்கள் இந்தத் தேர்தலையே நிராகரிக்கிறோம்.

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நிச்சயமாக நெஞ்சமில்லை. மற்ற யார் இப்படிப் பேசினாலும் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். தோற்றவர்கள் பாடும் துக்க கீதத்தில் சினத்தின் சாயல் இல்லாமல் இராது என்று சும்மா விட்டுவிடலாம். ஆனால் மாவோயிஸ்டுகள் விஷயத்தில் அங்ஙனம் செய்வதற்கில்லை. சர்தான் போடா என்று மீண்டும் அவர்கள் ஆயுதம் தூக்கப் போய்விட்டால் நாடு தாங்காது.தவிரவும் மன்னராட்சி முடிந்து மக்களாட்சி மலரத் தொடங்கிய நாளாக இன்றைக்கு வரைக்கும் அங்கே அரசியல் சாசனம் என்ற ஒன்று எழுதி முடிக்கப்படவில்லை. கடைசி ஒன்று அல்லது இரண்டு சேப்டர்கள் பாக்கி என்று சொல்கிறார்கள்.

ஒரு தம் கட்டி உட்கார்ந்தால் முடித்துவிடலாம்தான். எங்கே முடிகிறது? தேர்தல் முடிந்த முகூர்த்தத்திலேயே மாவோயிஸ்டுகள் ஆரம்பித்துவிட்டார்கள். இது தகுமோ? முறையோ? தருமம்தானோ? நடந்த தேர்தலையே செல்லாது என அறிவிக்கச் சொல்லி கிளர்ச்சியில் இறங்கிய மாவோயிஸ்டுகளை யார் என்ன செய்ய முடியும்? பண விளையாட்டு என்று சொன்னார்கள். அதிகார துஷ்பிரயோகம் என்று சொன்னார்கள்.

தேர்தல் முறைகேடுகளின் சகல சாத்தியப்பாடுகளையும் காங்கிரஸ் ஆத்ம சுத்தியுடன் கடைப்பிடித்ததாக தேசம் முழுதும் போய்ப் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள். ஐயா அதையெல்லாம் அப்புறம் நிதானமாக பேசித் தீர்த்துக்கொள்ளலாம்; முதலில் அரசியல் சாசனத்தை எழுதி முடிக்க ஒத்துழைப்புக் கொடுங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடி இப்போது ஒருவாறாக சம்மதிக்க வைத்திருக்கிறார்கள்.

கடந்த நவம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நிகழ்ந்திருக்கும் முறைகேடுகளை விசாரிக்க ஒரு குழு வேண்டுமா? சரி, அமைத்துவிடலாம். ஆனால் இப்போதல்ல. உடனே அல்ல. முதலில் அரசியல் சாசனத்தை எழுதுவோம். அதன்பிறகு இந்தப் பஞ்சாயத்தை வைத்துக்கொள்வோம். அதுவரைக்கும் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர்களை அறிவிப்பதில்லை. சம்மதமா? இந்த ஏற்பாட்டுக்கு நேபாள மாவோயிஸ்டுகள் சம்மதித்திருப்பது, ஆயுதத்தின் மீதிருந்த அதே நம்பிக்கை அவர்களுக்கு ஜனநாயகத்தின்மீதும் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

சக கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பி, சபைக்கு வருவதாகச் சொல்லிவிட்டார்கள். அரசியல் சாசனம் எழுதி முடிக்கப் படவேண்டியது முக்கியம். எங்களுக்கு அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் எங்கள் டிமாண்டிலும் மாறுதல் ஏதுமில்லை. சாசனம் எழுதும் வரை சமர்த்தாக இருப்போம். அது முடிந்தால் இதைத் தொடங்குவோம். அப்போது ஏதாவது களவாணித்தனம் பண்ணப் பார்த்தால் நடக்கிற கதையே வேறு. தேர்தல் தகிடுதத்தங்கள் தொடர்பாக மாவோயிஸ்டுகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்று முழுதாகவே தவறாக இருக்க வாய்ப்பில்லை.

ஏனெனில் நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்த சமயத்திலேயே தேர்தல் முறைகேடுகள் சம்பந்தமான முணு முணுப்புகள் மக்கள் மத்தியில் எழுந்தது. என்ன ஆனாலும் மாவோயிஸ்டுகளை அதிகாரத்துக்கு வரவிடக்கூடாது என்ற ஒற்றைச் செயல்திட்டம் மற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் இருந்ததை நினைவுகூர்ந்தபடியேதான் அவர்கள் வோட்டுப் போடவே போனார்கள். உலகின் முன்னணி ஏழை நாடுகளுள் ஒன்றான நேபாளம் இந்த ஐந்து வருடங்களாகத்தான் ஜனநாயகம் என்னும் குறைந்தபட்ச சந்தோஷத்தையே அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறது. தகிடுதத்தங்கள் இல்லாத ஜனநாயகமா? அதெல்லாம் இருக்கத்தான் செய்யும். அனைத்தையும் மீறி அரசியல்

சாசனம் எழுதி முடிக்கப்பட்டுவிடுமானால் பாராட்டித்தான் தீரவேண்டும். அரசியல் சாசனத்தையல்ல. அதற்கு வழி செய்து கொடுத்திருக்கும் மாவோயிஸ்டுகளை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x