

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு எதிராக மீண்டும் நாடு தழுவிய தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் தெரீக்-ஐ-இன்சாப் கட்சித் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழில திபர்கள் மற்றும் முக்கிய நபர்கள் உள்ளிட்டோர் சொந்த நாட்டில் வரி ஏய்ப்பு செய்த பணத்தை பனாமா நாட்டில் முதலீடு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பான ஆவணங்கள் பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டன.
இதில் நவாஸ் ஷெரீபின் வாரிசுகள் வெளிநாடுகளில் நிறுவ னங்களை தொடங்கி அதன்மூலம் சொத்துகளை வாங்கியதாகவும் தகவல் வெளியானது. இந்தக் குற்றச்சாட்டை ஷெரீபும் அவரது வாரிசுகளும் மறுத்திருந்தனர்.
இந்நிலையில், ஷவுகத் கனும் புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி திரட்டுவதற்காக சனிக்கிழமை இரவு நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற இம்ரான் கான் கூறியதாவது:
பிரதமர் நவாஸ் ஷெரீபின் வாரிசுகள் கருப்பு பணத்தை வெளி நாடுகளில் முதலீடு செய்துள்ளதாக பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் மூலம் அம்பலமாகி உள்ளது. இதைக் கண்டித்து மீண்டும் நாடு தழுவிய தர்ணா போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
நாட்டின் 10 சதவீத மக்களை (1.8 கோடி) ஒன்று திரட்டி வீதியில் இறங்கி போராட உள்ளோம். கருப்பு பணத்தை பதுக்கியதற்கு ஷெரீப் பொறுப்பேற்க வேண்டும். இதிலிருந்து அவர் தப்பித்துக் கொள்ள முடியாது.
ஏற்கெனவே 2013 பொதுத் தேர்தலில் நடைபெற்ற முறைகேடு களுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வலியுறுத்தி 4 தொகுதிகளில் மட்டும் மாதக் கணக்கில் தர்ணா போராட்டம் நடத்தினோம். ஆனால் இப்போது, பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில், பிரதமர் பொறுப்பேற்க வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும். இந்த மருத்துவமனை அறக்கட்டளை நிதியை நான் தவறாக பயன்படுத்துவதாக என் மீது குற்றம்சாட்டி உள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை பிரதமர் நவாஷ் ஷெரீபும் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிபும் நிரூபித்துவிட்டால் நான் பதவி விலகுகிறேன். அதேநேரம் நிரூபிக்க முடியாவிட்டால் அவர் கள் பதவி விலக வேண்டும்.
எங்கள் கட்சி ஜனநாயகத்தை தடம்புரளச் செய்வதாக ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி குற்றம்சாட்டியிருப்பதை ஏற்க முடியாது. தேர்தலில் முறைகேடு நடைபெற்ற 4 தொகுதிகளில் வாக்கு தணிக்கை செய்ய வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டிருந்தால் 126 நாள் தர்ணா போராட்டத்தை நடத்தி இருக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.