

தமிழர் பிரச்சினையில் ராஜபக்ஷே அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக, இலங்கை வடக்கு மாகாணத்தில் முதல்வராக பதவியேற்கவுள்ள சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இலங்கை வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழர்கள் பெருமளவு நிறைந்த இந்த மாகாணத்தில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு முடிந்தது. சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவான இந்தத் தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு மகத்தான வெற்றி பெற்றது.
மொத்தமுள்ள 38 இடங்களில் 30-ல் வென்று தமிழ் தேசிய கூட்டமைப்பு, அதிபர் ராஜபக்ஷேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை தோற்கடித்தது. 38 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சபையின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 இடங்களில் வென்று இரண்டாம் இடம்பிடித்தது. இலங்கை முஸ்லிம் காங்கிரஸுக்கு ஓரிடம் கிடைத்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், “தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறோம். இதற்கு அரசுடன் இணைந்துகொள்ளப் போகிறோம் என்பது அர்த்தமல்ல.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வாக்குப்பதிவு பிரச்சினையுடன்தான் நடந்தது. இயன்றவரை, தேர்தலை நிறுத்திவிடலாம் என இலங்கை அரசு நினைத்தது. இந்தியாவின் நெருக்கடி காரணமாக வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடந்தது” என்றார் விக்னேஸ்வரன்.
13-வது அரசியல் சட்டத்திருத்தம்
இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையொட்டி, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “இந்தத் தேர்தலில் தெளிவாகவும் துணிச்சலாகவும் முடிவு அளித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தத் தேர்தல் முடிவு, ஒன்றுபட்ட இலங்கைக்குள் மக்கள் இருக்க விரும்புபவதையே காட்டுகிறது. இலங்கையில் பாதுகாப்பாகவும் சுயமரியாதையுடனும் தமிழ் மக்கள் வாழ விரும்புகிறார்கள். தமிழர்களின் கோரிக்கையை ஏற்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த உறுதியுடன் இருக்கிறோம்” என்றார்.