Published : 31 Jan 2017 10:04 AM
Last Updated : 31 Jan 2017 10:04 AM

உலக மசாலா: நாக்கால் கண்களைச் சுத்தம் செய்யும் பெண்மணி!

போஸ்னியா கிராமத்தில் வசித்துவருகிறார் 80 வயது ஹவா செலிபிக். மனிதர்களின் கண்களில் இருக்கும் தூசு துகள்களைத் தன் நாக்கால் சுத்தம் செய்கிறார். ‘நானா ஹவா’ என்று அழைக்கப்பட்ட வேறொரு பெண்மணி, பல ஆண்டுகளுக்கு முன்பு இப்படி நாக்கால் கண்களைச் சுத்தம் செய்து வந்திருக்கிறார். அவர் பெயரையே செலிபிக் பாட்டிக்கும் வைத்துவிட்டனர். இவரிடம் ரஷ்யர்கள், அமெரிக்கர்கள் உட்பட உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மக்களும் கண் களைச் சுத்தம் செய்து கொள்ள வருகிறார்கள். சிலர் நவீன மருத்துவத் தால் செய்ய முடியாத விஷயத்தைக்கூட ஹவா செலிபிக், தன் நாக்கால் சரி செய்துவிடுகிறார் என்கிறார்கள். கண்களில் விழுந்த நிலக்கரி, இரும்புத் துகள், ஈயம், மரத்தூள், கண்ணாடி போன்றவற்றை நீக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். “மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு, சரியாகாதவர்கள்தான் என்னிடம் வருகிறார்கள். என் வாழ்நாளில் 5 ஆயிரம் பேருக்கு நாக்கால் கண்களைச் சுத்தம் செய்திருக்கிறேன். கண்களைச் சுத்தம் செய்யும் முன் என் வாயை ஆல்கஹால் மூலம் நன்றாகச் சுத்தம் செய்துகொள்வேன். எந்த ஒரு சிறு பொருளும் என் நாக்கிடமிருந்து தப்பிக்க முடியாது. என் குழந்தைகளுக்கு நாக்கால் சுத்தம் செய்வது பிடிக்காது. அதனால் அவர்கள் யாரும் என்னிடம் இதைக் கற்றுக்கொள்ள முன்வரவில்லை. கட்டணமாக 730 ரூபாயைப் பெறுகிறேன். வேலை இல்லாதவர்கள், ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் செய்து அனுப்புகிறேன்” என்கிறார் ஹவா செலிபிக்.

நாக்கால் கண்களைச் சுத்தம் செய்யும் பெண்மணி!

கேத்ரின் ஹவார்த், ரிச்சர்ட் தம்பதியர் இங்கிலாந்தில் வசிக்கிறார்கள். கேத்ரின் நைஜீரியாவைச் சேர்ந்த ஆப்பிரிக்கர். ரிச்சர்ட் இங்கிலாந்துக்காரர். இருவருக்கும் முதல் குழந்தை வெள்ளைத் தோல், நீல நிறக் கண்களுடன் பிறந்தது. மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். பத்து லட்சம் பேரில் ஒருவருக்குதான் இப்படிக் கலப்பின ஜோடியில் ஒருவரின் சாயல் கொண்ட குழந்தை பிறக்கும் என்றார்கள். கடந்த மார்ச் மாதம் இரண்டாவது குழந்தை பிறந்தது. இதுவும் வெள்ளைத் தோலும் நீலக் கண்களுமாகக் காட்சியளித்தது. மருத்துவர்கள் இந்த நிகழ்வு அதிசயத்திலும் அதிசயம் என்றார்கள். ஒரு குழந்தை அம்மா போலவும் இன்னொரு குழந்தை அப்பா போலவும் பிறந்திருக்கின்றன. இருவரின் நிறங்களைக் கலந்து பிறந்திருக்கின்றன. ஆனால் கேத்ரினுக்கு மட்டும் இரண்டு குழந்தைகளும் ரிச்சர்டைப் போலவே பிறந்திருப்பதால் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது. கேத்ரினின் மூதாதையர்கள் யாராவது கலப்பினத்தில் திருமணம் செய்திருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் அப்படி எந்தத் தகவலும் இல்லை என்கிறார் கேத்ரின். “எல்லோருக்கும் வெள்ளையாகக் குழந்தைகள் பிறந்ததில் ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் எங்களுக்கு நிறம் குறித்து எந்தவிதப் பெருமையோ, சிறுமையோ இருந்ததில்லை. நான் குழந்தைகளை அழைத்துச் சென்றால், இந்த உலகம் என்னைக் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் வேலைக்காரி என்றுதான் நினைக்கிறது. வெள்ளைக் குழந்தைக்கு அம்மாவாக இருக்க முடியாது என்று நம்புகிறது. பத்து லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தையாக என்னுடைய இரு குழந்தைகளும் இருப்பதில் எனக்கு சந்தோஷம். மற்றபடி நிறம் குறித்த எந்தக் கருத்தும் என்னிடம் இல்லை” என்கிறார் கேத்ரின். “குழந்தைகள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைத் தவிர எனக்கு வேறு எந்த எண்ணமும் இல்லை” என்கிறார் ரிச்சர்ட்.

நிறம் குறித்த புரிதல்களை இந்தத் தம்பதியரிடம் கற்றுக்கொள்ளலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x