

கனடாவைச் சேர்ந்த டிம் டோசெட் பார்வையற்ற வானியலாளர். பகலில் சராசரி மனிதர்களைப் போல 10 சதவீதம் மட்டுமே அவரால் பார்க்க இயலும். ஆனால் இரவு நேரத்திலோ மனிதர்களால் பார்க்க இயலாத விண்மீன் கூட்டங்களையும் இவரால் பார்க்க முடியும். சிறு வயதில் பார்வையை அதிகரித்துக் கொள்வதற்காகக் கண்களில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது கண்களில் உள்ள லென்ஸுகள் அகற்றப்பட்டன. கண் பாவையை அகலமாக்கி, பார்வையை அதிகரிக்க வைத்தனர். சாதாரண மனிதர்களுக்கு வெளிச்சத்துக்கு ஏற்ப கண் பாவை தானாகவே சரி செய்துகொள்ளும்.
ஆனால் டிம்முக்கு எப்போதும் கண் பாவை விரிந்தே இருக்கும். பகல் நேரத்தில் அளவுக்கு அதிகமான வெளிச்சம் கண்களில் விழும். இதற்காக கறுப்பு கண்ணாடியை அணிந்துகொள்வார். அப்படியும் கண் கூசும், பார்வையும் சரியாகத் தெரியாது. இரவில் நேர் மாறாக வெறும் கண்களால் பார்க்க முடியாத விஷயங்களையும் இவரால் பார்க்க முடியும். “அறுவை சிகிச்சை முடிந்து நான் வெளியே வந்து ஆகாயத்தைப் பார்த்தேன். வானில் லட்சக்கணக்கான ஒளிப் புள்ளிகள் தெரிந்தன. முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் நம் அண்டத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் அவை என்று தெரிந்துகொண்டேன். 12 ஆண்டுகளுக்கு முன்பு என் மனைவி அமண்டா, ஒரு தொலைநோக்கியை வாங்கிப் பரிசளித்தார். அதிலிருந்து வானியல் ஆராய்ச்சி என் பொழுதுபோக்காக மாறியது. தொலைநோக்கியில் எல்லோரும் நிலவைப் பார்த்தால், நான் அதில் இருக்கும் பள்ளங்களைப் பார்த்தேன். என்னுடைய சேமிப்பை வைத்து
‘டீப் ஸ்கை ஐ அப்சர்வேட்டரி’ ஒன்றை ஆரம்பித்திருக்கிறேன். என் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் டிம் டோசெட். இவரது மனைவியும் பார்வையற்றவர்.
யாராலும் பார்க்க முடியாததைப் பார்க்கும் அதிசய மனிதர் டிம்!
ஜப்பானைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், முட்டையின் ஓடு இல்லாமல், ஒரு கோழிக் குஞ்சை உருவாக்கியிருக்கிறார்கள். முட்டையை உடைத்து, ஒளி புகக்கூடிய பிளாஸ்டிக் டம்ளரில் ஊற்றினார்கள். பிறகு பிளாஸ்டிக் தாளைப் போட்டு மூடினார்கள். காற்று புகுவதற்காக மிகச் சிறிய துளைகள் போட்டனர். சில வேதிப் பொருட்களை சேர்த்தனர். பிறகு இன்குபேட்டரில் வைத்துவிட்டனர். மூன்றாவது நாளிலேயே முட்டையில் இதயம் உருவாக ஆரம்பித்தது. 5-வது நாளில் இதயத்தின் வடிவம் தெரிந்தது. அனைத்தையும் முழுமையாக வீடியோ எடுத்தனர். கருவில் இருந்து உறுப்புகள் உருவாவதைக் கண் முன்னே கண்டனர். 21-வது நாள் முழு கோழிக் குஞ்சு கால்களால் பிளாஸ்டிக் தாளை உதைத்துக்கொண்டு, எழுந்தது! விஞ்ஞானிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற பரிசோதனைகளை செய்து பார்த்துவிட்டனர். பள்ளி மாணவர்கள் செய்வது இதுதான் முதல் முறை.
சுவாரசியமான முயற்சி!
பாஸ்டனைச் சேர்ந்த டான் புட்ரெல், ஐசாக் ஸ்டோனர் இருவரும் ஆண்டிஸ் மலை மீது பயணம் மேற்கொண்டனர். அப்போது 31 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான ஒரு விமானத்தின் கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடித்தனர். “கடந்த ஆண்டு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, விமான விபத்து குறித்த ஆராய்ச்சியை தொடங்கினோம். ஈஸ்டர்ன் விமானம் 980, விபத்து நடந்த பிறகு அதன் கறுப்புப் பெட்டி மீட்கப்படாதது தெரிய வந்தது. நானும் ஐசாக்கும் அந்தக் கறுப்புப் பெட்டியைத் தேடி ஆண்டிஸ் மலையில் பயணம் மேற்கொண்டோம். 15 மணி நேரம் பனிச் சிகரத்தில் ஏறி, 20 ஆயிரம் அடி உயரத்தை அடைந்தோம். பல மணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை. முயற்சியைக் கைவிட முடிவு செய்தபோது, அந்தக் கறுப்புப் பெட்டி கிடைத்தது. மோசமான வானிலையால் இந்தக் கறுப்புப் பெட்டியில் உள்ள தகவல்கள் பத்திரமாக இருக்குமா என்று தெரியவில்லை. ஒருவேளை ஏதாவது சிறிய தகவல் கிடைத்தாலும் எங்கள் பயணம் வெற்றியே” என்கிறார் டான் புட்ரெல்.
சாமானியர்கள் சாதனையாளர்களாகிவிட்டனர்!