ரான்பாக்ஸி மருந்து இறக்குமதிக்கு அமெரிக்கா தடை

ரான்பாக்ஸி மருந்து இறக்குமதிக்கு அமெரிக்கா தடை
Updated on
1 min read

ரான்பாக்ஸி நிறுவனத்தின் 4-வது தொழிற்சாலையில் தயாராகும் மருந்துகளை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்திருப்பதால் அந்த நிறுவனத்துக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தத் தடை காரணமாக, இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.

உற்பத்தி விதிமுறைகளை மீறியதாகக் கூறி, ரான்பாக்ஸி நிறுவனத்துக்குச் சொந்தமாக அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ஓம் லேபராட்டஸில் தயாரிக்கப்பட்ட மருந்து உட்பட பஞ்சாப் மாநிலத்தில் உள்ள டோன்சா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (யுஎஸ்எப்டிஏ) தடை விதித்துள்ளது.

மேலும், அமெரிக்கர்களுக்கான மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ரான்பாக்ஸி நிறுவனத்தின் மற்ற தொழிற்சாலைகள் உள்பட இதர நிறுவனங்களுக்கு டோன்சா ஆலையிலிருந்து மருந்து மூலப் பொருள்களை வழங்கவும் தடை விதிப்பதாக யுஎஸ்எப்டிஏ உத்தரவில் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மருந்து மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் கரோல் கூறுகையில், "தரமற்ற பொருட்கள் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

இதுகுறித்து ரான்பாக்ஸி நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் அருண் சாவ்னே கூறுகையில், "அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஏற்கத்தக் கதல்ல. இதுதொடர்பாக நிறுவன அளவிலான ஆய்வுக்குப் பிறகு நிர்வாக ரீதியில் தகுந்த நட வடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அதேநேரம் இதனால் ஏற்பட்ட இடையூறுக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மும்பை பங்குச் சந்தையில் ரான்பாக்ஸி நிறுவன பங்குகளின் விலை 19.5 சதவீதம் குறைந்து ஒரு பங்கு ரூ.335.65க்கு விற்பனையானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in