

வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் தலிபானின் முன்னாள் இடைக்காலத் தலைவர் உள்பட 50 தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர்.
வடக்கு வஜிரிஸ்தானில் தீவிரவாதிகள் பதுங்கியிருப் பதாக சந்தேகிக்கப்பட்ட பகுதி களில் பாகிஸ்தான் விமானப் படையினர் திங்கள்கிழமை இரவு தாக்குதல் நடத்தினர். இதில் 50 தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர்.
இது தொடர்பாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “உயிரிழந்தவர்களில் பெரும் பாலானோர் வெளிநாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள். இதில், உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 33 பேர், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த கமாண்டர்கள் வாலி முகமது, அஸ்மத் ஷாகின் பிட்டானி, நூர் பாட்ஷா மவுல்வி ஃபர்கத் உஸ்பெக் ஆகியோரும் கொல்லப்பட்டனர்” என்றார்.
இதில் அஸ்மத் ஷாகின் பிட்டானி, பாகிஸ்தான் தலிபானின் இடைக்காலத் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். அந்த இயக்கத்தின் தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சூத் கொல்லப்பட்டபோது பிட்டானி தற்காலிகமாக தலைவர் பொறுப்பை வகித்துள்ளார்.
பாகிஸ்தான் வான் வழித் தாக்குதலை மேற்கொண்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2007-ம் ஆண்டு தலிபான்களுடன், பாகிஸ்தான் அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டதிலிருந்து ராணு வம் தாக்குதல் எதையும் மேற் கொள்ளாமல் இருந்தது.
ராணுவம் தொடர்ந்து தீவிரவாதிகளின் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல தொடங்கிவிட்டனர்.