Published : 27 Nov 2013 12:00 AM
Last Updated : 27 Nov 2013 12:00 AM

வலுவடைகிறது லஷ்கர்-இ-தொய்பா : அமெரிக்க வல்லுநர்கள் கருத்து

முன்னெப்போதையும் விட பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர் – இ – தொய்பா அமைப்பு வலுவடைந்துள்ளது. இந்த அமைப்பை இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு பாகிஸ்தான் ராணுவமும், உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன என்று அமெரிக்க வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் லஷ்கர் – இ – தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த சம்பவம் நிகழ்ந்து 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இப்போதும் அந்த தீவிரவாத அமைப்பு வலுவாகவே இருப்பதாக அமெரிக்க வல்லு நர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் முன்னாள் ஆய்வாள ரும், தெற்கு ஆசிய தீவிரவாத எதிரப்பு நடவடிக்கைகள் தொடர்பான வல்லுநருமான புரூஸ் ரீடெல் கூறியதாவது:

“முன்னெப்போதையும் விட லஷ்கர் – இ – தொய்பா வலுவடைந்து உள்ளது. பாகிஸ்தானில் வலுவாக காலூன்றியுள்ள அந்த அமைப்பு வளைகுடா நாடுகளிலும் தனது கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது.

தனது அமைப்பின் செயல்பாடுகளுக்காக உலகின் பல பகுதிகளில் இருந்து அந்த அமைப்பு நிதி திரட்டி வருகிறது. இந்தியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அந்த அமைப்பு உருவாகியுள்ளது.

மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய லஷ்கர் – இ – தொய்பா அமைப்பினர் மீது பாகிஸ்தான் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை” என்றார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தெற்காசிய பிரிவு இயக்குநராக பணிபுரிந்துள்ள அனீஷ் கோயல் கூறுகையில், “லஷ்கர் – இ – தொய்பா அமைப்பை ஒடுக்கும் பணி திறம்பட மேற்கொள்ளப்படவில்லை. இப்போதும் அந்த அமைப்பு இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது” என்றார்.

பாகிஸ்தானை சேர்ந்த அறிஞர் ஆரிப் ஜமல் கூறுகையில், “ஜமாத் உத் தவா அமைப்பின் தீவிரவாதப் பிரிவான லஷ்கர் – இ – தொய்பா உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. அதில் போர்ப் பயிற்சி பெற்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாத அமைப்புகளை மட்டுமே ராணுவம் ஒடுக்குகிறது. இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக செயல்படும் லஷ்கர் – இ – தொய்பா அமைப்புக்கு ராணுவம் ஆதரவு அளித்து வருகிறது” என்றார்.

அமெரிக்கா வலியுறுத்தல்

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “அதிபர் ஒபாமா ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளபடி, மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டோர். அவர்களுக்கு நிதி, ஆயுத உதவி செய்தோர் உள்ளிட்ட அனைவரையும் நீதியின் முன் நிறுத்த வேண்டும்.

இதுபோன்ற தாக்குதல்கள் நம் அனைவரின் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்துபவை. உலக அளவில் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் பிற நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. மும்பை சம்பவம் நிகழ்ந்து 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பக்கபலமாக இருப்போம். குற்றவாளி களை நீதியின் முன் நிறுத்த தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x