

ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு எதிராக, ஏமன் மீது சவுதி அரேபியா நடத்தி வரும் வான்வழித் தாக்குதலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39 பேர் பலியாகினர்.
இந்தத் தகவலை ஏமன் நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, ஏமன் தலைநகர் சனாவை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட வான்வழித் தாக்குதலில் 39 பேர் பலியானதாக ஏமன் மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்த அனைவருமே பொதுமக்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வான்வழித் தாக்குதல் அல்-சமா ராணுவ தளத்தை குறி வைத்து நடத்தப்பட்டதாக, அதனை நேரில் பொதுமக்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
அதேபோல, சனாவில் அதிபர் அரண்மனை அருகே இன்று அதிகாலை நேரத்தில் 3 முறை வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிபர் அரண்மனை மற்றும் துறைமுக நகரான ஏடனை கடந்த மாதமே ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு எதிராக சவுதி அரேபியா போர் - பின்னணி
ஏமனில் 1990 முதல் 2012 பிப்ரவரி வரை அலி அப்துல்லா சேலா என்பவர் அதிபராக இருந்தார். ஷியா பிரிவைச் சேர்ந்த அவருக்கு எதிராக 2011-ல் புரட்சி வெடித்தது.
இதைத் தொடர்ந்து சன்னி பிரிவைச் சேர்ந்த மன்சூர் ஹதி, ஏமனின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றார். அவருக்கு எதிராக ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படையினர் உள்நாட்டுப் போரை தொடங்கினர்.
சில மாதங்களுக்கு முன்னர் தலைநகர் சனாவை, ஹவுத்தி கிளர்ச்சிப் படை கைப்பற்றியது. அதிபர் மன்சூர் ஹதி துறைமுக நகரான ஏடனுக்கு தப்பிச் சென்று அந்த நகரை ஏமனின் தலைநகராக அறிவித்தார்.
கடந்த வாரம் ஏடன் மீதும் ஹவுத்தி கிளர்ச்சிப் படை தாக்குதலை தொடங்கியது. கிளர்ச்சிப் படை முன்னேறி வரும் நிலையில் அதிபர் மன்சூர் ஹதி அந்த நகரில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.
சவுதி திடீர் தாக்குதல்
ஏமனுக்கு அருகில் சன்னி முஸ்லிம்கள் ஆதிக்கம் நிறைந்த சவுதி அரேபியா, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் அமைந்துள்ளன. அந்த நாடுகளின் தலைவர்கள் சன்னி பிரிவைச் சேர்ந்த ஏமன் அதிபர் மன்சூர் ஹதியை ஆதரித்து வருகின்றனர்.
அதேநேரம் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
இந்தப் பின்னணியில் அதிபர் மன்சூர் ஹதியின் வேண்டுகோளை ஏற்று ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு எதிராக சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் ஏமனுக்கு எதிராக நேற்று திடீர் தாக்குதலைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது
இந்தப் போரில் அமெரிக்கா நேரடியாக ஈடுபடவில்லை. ஆனால் சவுதி அரேபியாவுக்கு பின்னணியில் இருந்து உதவுவதாகக் கூறப்படுகிறது.
சவுதி அரேபியாவின் தாக்குதலுக்கு ஈரான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.