

ருவாண்டா உளவுப் பிரிவு முன்னாள் தலைவர் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ருவாண்டா தேசிய காங்கிரஸ் (ஆர்என்சி) வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஜோகன்னஸ்பர்கில் கர்னல் பாட்ரிக் கரேகேயா கொலை செய்யப்பட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது சடலம் மைக்கேல் ஏஞ்சலோ டவர்ஸ் ஹோட்டலின் ஒரு அறையிலிருந்து கண்டெடுக்கப் பட்டது" என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆர்என்சியின் ஆப்பிரிக்க மண்டல தலைவர் பிராங்க் நட்வலி கூறுகையில், "ருவாண்டா அதிபர் பால் ககாமேயின் கூலிப்படையினர்தான் கரேகேயாவை கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளனர்" என்றார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிபர் ககாமேவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த கரேகேயா, வெளிநாடுகளுக்கான உளவுத்துறை தலைவராக இருந்தார். பின்னர் ராணுவ செய்தித் தொடர்பாளராக பதவியிறக்கம் செய்யப்பட்ட கரேகேயா, கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அதன்பிறகு கடந்த 2006-ல் அவரது கர்னல் பதவியைப் பறித்ததுடன் நாடுகடத்தப்பட்டார். இதையடுத்து அவர் தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்தார்.