

அமெரிக்க அதிபராக பதவியேற் றால் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை கொன்றது போல ஐஎஸ் தீவிரவாத தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதியையும் கொன்று காட்டுவேன் என ஹிலாரி கிளிண்டன் சபதமிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் தொழிலதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். இதையொட்டி இரு கட்சித் தலைவர்களும் அமெரிக்கா முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நியூயார்க்கில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது ஹிலாரி பேசியதாவது:
ஐஎஸ் தீவிரவாத அமைப்பை ஒழித்து கட்டுவது தான் எனது மிகப் பெரிய லட்சியம். இராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் அரபு மற்றும் குர்த் இன மக்களுக்கு நாம் அதிக ஆதரவு அளிக்க வேண்டும்.
அதிபராக நான் பதவியேற்றால் போர் நடந்து வரும் இராக், சிரியா நாடுகளுக்கு ஒருபோதும் அமெரிக்க துருப்புகளை அனுப்பி வைக்கமாட்டேன். மாறாக ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்கும் பணியில் இராக் ராணுவத்துக்குத் தேவையான அனைத்து உதவி களையும் வழங்க நடவடிக்கை எடுப்பேன். ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த அல் கொய்தா தீவிரவாதி ஒசாமா பின்லேடனைப் பின்தொடர்ந்து சென்று ஒழித்து கட்டியது போல, ஐஎஸ் தீவிரவாத தலைவர் அல் பாக்தாதியையும் ஒழித்து கட்ட நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.