மலேசிய விமான விபத்துக்கு விமானியின் சதியே காரணம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

மலேசிய விமான விபத்துக்கு விமானியின் சதியே காரணம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்
Updated on
1 min read

விமானியின் சதி காரணமாகவே மலேசியாவின் எம்.ஹெச்.370 விமானம் திசை மாற்றப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங் நோக்கி 239 பயணிகளுடன் கடந்த 2014 மார்ச், 8-ம் தேதி புறப்பட்டுச் சென்ற மலேசிய விமான நிறுவனத்துக்கு சொந்தமான எம்.ஹெச்.370 விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

விபத்து நிகழ்ந்து 2 ஆண்டுகள் உருண்டோடியும், இதுவரை விமானத்தின் சிதைந்த பாகங்கள் கூட கண்டுபிடிக்கப்படவில்லை. அதே சமயம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் உயிரிழந்துவிட்டதாக மலேசிய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்த சூழலில் எம்.ஹெச்.370 விமானத்தின் விமானி ஜஹாரி அஹமது ஷா சதிச் செய்து விமானத்தை கடத்தி இருப்பதாக அந்நாட்டு அரசு முதல் முறையாக அறிவித்துள்ளது. இது குறித்து மலேசிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் லியோவ் தியோங் லாய் கூறும்போது,

‘‘விமானியின் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிமுலேட்டர் கருவியில் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதி வழியாக விமானத்தை செலுத்துவதற்கான வழித் தடங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழித் தடங்களை அந்த கருவியில் அவர் பதிவு செய்து வைத்துள்ளார். அதனால், விமானத்தை எந்த திசையை நோக்கி செலுத்தினார் என்பதை உறுதியாக கூற முடியாது’’ என தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் நியூயார்க் மேகஸீன் எழுதிய போது, கேப்டன் ஷா-வின் சதியை அம்பலப்படுத்தியது. எனவே இது விபத்து அல்ல பெரிய அளவிலான கொலை-தற்கொலை நடவடிக்கை என்று எழுதியிருந்தது.

ஆனால் விமானம் மாயமான பாதை கேப்டன் ஷா-வின் திட்டமிட்ட திசைதிருப்பலாக இருக்க முடியாது, அப்படி செய்திருக்க சாத்தியமுள்ள திட்டம் பற்றியே தெரியவருகிறது, எனவே இந்தக் கோட்பாட்டையும் நாம் உறுதியாக கூற முடியாது என்று ஆஸ்திரேலிய தரப்பில் கூறப்படுகிறது.

மலேசியாவின் தேசிய போலீஸ் தலைமையான காலித் அபுபக்கர் கூறும்போது, கருப்புப் பெட்டி, பைலட் அறை குரல் பதிவு எந்திரம், தரவுப்பதிவு எந்திரம் ஆகியவை கிடைக்காமல் எதையும் சொல்ல முடியாது என்றார் ஆனால் பைலட் ஷா-வின் தற்கொலை-கொலை முயற்சி என்பதையும் அவர் கொள்கை அளவில் மறுக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in