

ரியாத் பெண்கள் வாகனம் ஒட்டுவதற்கு அனுமதி கோரியுள்ள நிலையில் அதனை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி சவூதி அரேபியாவில் மன்னர் மாளிகை முன்பாக மூத்த மதகுருக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்களை வாகனம் ஒட்ட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சவூதியில் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. வரும் 26 ஆம் தேதி இதை வலியுறுத்தி 16 ஆயிரம் கையொப்பங்கள் பெறப்படவுள்ளன.
இதனிடையே இது போன்ற பிரசாரத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக, சவூதியில் உள்ள மதத்தலைவர்களும் மத குருக்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.
சவூதி அரேபியா பழமைவாதத்தில் ஊறிப்போன நாடு என்ற போதும் அதன் அரசர் அப்துல்லா சமூக மாற்றங்களில் நம்பிக்கையுடையவர்.
ஆனால், அங்கு மதகுருக்கள் மிகுந்த செல்வாக்கு படைத்தவர்கள். இதனால், சமூக மாற்றங்களை ஏற்படுத்த முனையும் அப்துல்லாவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
சவூதியில் கடந்த காலங்களில் பெண்கள் வாகனம் ஓட்ட முயற்சித்தால் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படுவர்.
ஒரு பெண்ணுக்கு 10 கசையடிகள் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், அரசர் அப்துல்லா தலையிட்டு அப்பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கினார்.