Published : 19 Oct 2014 12:31 PM
Last Updated : 19 Oct 2014 12:31 PM

உலக மசாலா - பன்றிக்குட்டிக்கு தும்பிக்கை

சீனாவைச் சேர்ந்த 51 வயது லியாங் யான்குவோ ‘குங்ஃபு மேன்’ என்று அழைக்கப்படுகிறார். இரண்டு மரங்களுக்கு இடையே ஒற்றைக் கயிற்றைக் கட்டி, அதில் உறங்குகிறார், படிக்கிறார், உடற்பயிற்சி செய்கிறார்! அமைதியாக இப்படி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் லியாங்கை, பூங்காவுக்கு வருகிறவர்கள் ஆச்சரிய மாகப் பார்க்கிறார்கள். புகைப்படங்கள் எடுக்கிறார்கள்.

ஒற்றைக் கயிற்றில் உடலைச் சமநிலைப்படுத்தி தூங்கும் வித்தையை தனது குங்ஃபு மாஸ்டரிடம் இருந்து கற்றுக்கொண்டார் லியாங். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கயிற்றில் தூங்கும் வித்தையைக் கற்க ஆரம்பித்தபோது, தொண்டையில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஓய்வெடுக்கா விட்டால் இன்னும் 6 மாதங்களே உயிர் வாழ முடியும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். புற்றுநோய் சிகிச்சைக்காகச் சேமிப்பு எல்லாம் கரைந்துவிட்டது.

வேலையும் செய்ய இயலவில்லை. தன்னுடைய கவனத்தை மீண்டும் ஒற்றைக் கயிற்றில் தூங்கும் முயற்சியில் திருப்பினார் லியாங். இப்படித் தூங்குவதால் நன்றாக ஓய்வெடுக்கவும் முடிகிறது, வேகமாக குணமாகவும் செய்கிறது என்கிறார் லியாங்!

நம்பிக்கை பாதி, மருந்து மீதின்னு நிரூபிக்கிறீங்க லியாங்!

கடந்த 10 ஆண்டுகளாக இத்தாலியில் உள்ள சிசிலியன் கிராமத்தில் தீப்பிடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்த வண்ணம் உள்ளன. படுக்கை, கார், டிவி, ஃப்ரிட்ஜ், மொபைல் போன், சோஃபா என்று தீப்பிடிக்காத பொருட்களே கிடையாது. விஷயம் விஸ்வரூபமானது. புவியியலாளர்கள், இயற்பியலாளர்கள், எரிமலை ஆராய்ச்சியாளர்கள் வந்து, தீப்பிடிக்கும் காரணத்தைத் தேடினார்கள்.

ஆனால் ஒருவராலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மின்சாரத்தைத் துண்டித்தும் பார்த்துவிட்டார்கள். அப்படியும் தீப்பிடிப்பது நிற்கவில்லை. பேய் ஓட்டினார்கள். ஏலியனின் சதியாக இருக்கும் என்று எண்ணினார்கள். ஆனாலும் ரகசியம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மனிதர்கள் கண்டுபிடிக்கப்படாத விஷயங்கள் உலகில் ஏராளம் உள்ளன. இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ம்ம்... உண்மை தெரிகிற வரை மனிதனின் கற்பனைகளுக்குப் பஞ்சம் இருக்காது!

சீனாவின் வடகிழக்கு பகுதியில் வித்தியாசமான பன்றிக் குட்டி ஒன்று பிறந்தது. அந்தப் பன்றிக் குட்டிக்கு வாய் இல்லை. யானையைப் போன்று சிறிய தும்பிக்கை மட்டும் இருந்தது. இந்த விசித்திரமான பன்றிக் குட்டி, பிறந்து இரண்டு மணி நேரமே உயிருடன் இருந்தது. விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்காக, இந்தப் பன்றிக் குட்டியின் உடலை பாதுகாத்து வருகிறார்கள்.

வாய், மூக்கு ரெண்டும் சேர்ந்து ஒண்ணாயிட்டதால வந்த குழப்பம் இது!

மிக அதிகமான வலியைத் தரக்கூடியது பெண்களின் பிரசவம். குழந்தை பிறக்கும்போது மட்டுமே இந்த வலியைப் பெண்கள் உணர்கிறார்கள். காலப்போக்கில் பிரசவ வலியை நினைவில் வைத்துக்கொள்வதில்லை என்று இஸ்ரேலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 320 அம்மாக்களை வைத்து இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. குழந்தை பிறக்கும் நேரத்தில், வாழ்க்கையில் அனுபவிக்கும் அதிகபட்ச வலி என்று சொன்ன பெண்கள், 2 நாட்களுக்குப் பிறகு தங்கள் வலியைக் குறைத்துச் சொன்னார்கள். 2 மாதங்களுக்குப் பிறகு, பிரசவ வலியை மறந்தே போனார்கள்.

வலி மட்டும் நினைவில் இருந்தால், அடுத்த குழந்தைக்கு எப்படி ’யெஸ்’ சொல்வார்கள்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x