

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததால் அதிபர் மகிந்த ராஜபக்சே பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்.
அதன் வெளிப்பாடாக, கடல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 98 பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த தகவலை அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளர் விஜயானந்த ஹெராத் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீது வியாழக்
கிழமை வாக்கெடுப்பு நடந்தது. இந்தியா அதில் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்ததால் மகிழ்ச்சியில் உள்ள அதிபர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
இதன்படி 98 தமிழக மீனவர்களும் விடுவிக்கப்படுவார்கள். இலங்கை பாதுகாப்பில் உள்ள அவர்களது 62 படகுகளும் ஒப்படைக்கப்படும். அதிபரின் உத்தரவு அட்டர்னி ஜெனரல் துறை மற்றும் மீன்வள அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் விடுதலை தொடர்பான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்வார்கள் என்றார் ஹெராத்.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் வியாழக்கிழமை நிறைவேறியது. இதற்கான வாக்கெடுப்பில் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் பங்கேற்காமல் புறக்கணித்தன.
பெரிஸ் பாராட்டு
இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸும் இந்தியா எடுத்த நிலைப்பாட்டை பாராட்டியிருக்கிறார். ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பு நாடுகள் மீது அமெரிக்கா கொடுத்த அழுத்தமே இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற உதவியிருக்கிறது. அமெரிக்கா கொடுத்த அந்த அழுத்தம் நம்பமுடியாத அளவுக்கு இருந்துள்ளது. எனக்கு நண்பனா எதிரியா என்றெல்லாம் கேட்டிருக்கிறது. மேலும் அமெரிக்காவுக்கும் உறுப்பு நாடுகளுக்கும் இடையே நிதி உதவி ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றார் பெரிஸ்.
மீனவப் பிரதிநிதிகள் விரைவில் பேச்சு?
தமிழக மீனவர்கள் அனைவரையும் இலங்கை விடுதலை செய்வதால் கொழும்பில் இந்திய-இலங்கை மீனவர் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவப் பிரதிநிதிகளின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை கொழும்பில் மார்ச் 13ல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், 25ம் தேதிக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
இலங்கை சிறைகளில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே தமது நிலைப்பாட்டை அறிவித்தார்.பி.டி.ஐ