

வங்கதேசத்தில் எழுத்தாளர்கள், வலைப்பதிவர்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லை என எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் காட்டமாக தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறார்.
கடந்த 20 வருடங்களில் அவர் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இடமாறி வாழ்ந்து தனது எழுத்துப் பணியை தொடர்கிறார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை வங்கதேசத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "வங்கதேசத்தில் வலைபதிவாளர்கள், எழுத்தாளர்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லை. அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பல வலைப்பதிவாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு வங்கதேசத்தில் வளர்ந்து வரும் முஸ்லிம் தீவிரவாதமே காரணம்.
உள்நாட்டிலேயே வளர்ந்து வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல் காய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தங்கள் தொடர்பை வலுப்படுத்தியுள்ளனர்.
நாட்டில் நிலவும் இத்தகைய நிலையை பிரதமர் ஷேக் ஹசீனா புறக்கணித்து வருவது கவலையளிக்கிறது" எனக் கூறியுள்ளார்.