

இணையச் சேவையை உலகின் அனைத்துப் பகுதி மக்களும் எளிதாகவும் இலவசமாகவும் பெற வசதியாக அவுட்டர்நெட் திட்டத்தை நியூயார்க்கின் ஊடக மேம்பாட்டு முதலீட்டு நிதியம் செயல்படுத்தவுள்ளது.
அதிக சேவைக் கட்டணம், தணிக்கை, கட்டுப்பாடு, தொலை தூரத்தை சென்றடைவதில் சிக்கல் போன்ற பல்வேறு காரணங்களால் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இந்த குறையை போக்கும் வகையில் அனைத்து நாட்டினரும் எளிதாக இணையத்தின் சேவையை பெற வசதியாக ‘அவுட்டர்நெட்’ என்ற புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்படும் ஊடக மேம்பாட்டு முதலீட்டு நிதியம் சார்பில் விண்ணில் நூற்றுக்கணக்கான கியூப் செயற்கைக்கோள்கள் செலுத்தப்படும். இந்த செயற்கைக்கோளின் தயாரிப்புச் செலவு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் முதல் 3 லட்சம் அமெரிக்க டாலர் வரை ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையை நன்கொடைகள் மூலம் திரட்ட அந்நிறுவனம் திட்ட மிட்டுள்ளது.
சிறிய அளவு எடை கொண்ட இந்த செயற்கைக்கோள்கள் பூமியில் உள்ள தகவல் மையங்களிடமிருந்து தரவுகளைப் பெற்று ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும். இந்த செயற்கைக்கோள்களில் இருந்து செல்போன், கணினி வழியாக தகவல்களை மக்கள் பெற முடியும்.
இதுவரை இணையத்தின் சேவையை பெற இயலாமல் உள்ள சைபீரியா, அமெரிக்காவின் மேற்குப் பகுதி மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளின் கிராமப்புறங்கள், உலகின் பல்வேறு தீவுகளில் வசிக்கும் மக்கள் பயனடையும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.