

இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி ஊழல் வழக்கு தொடர்பாக இஸ்லாமாபாத் நீதி மன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரானார்.
பிரதமர் இல்லத்தில் போலோ விளையாட்டு மைதானம் கட்டியது, ரஷ்யா, போலந்து நாடுகளில் இருந்து டிராக்டர்கள் இறக்குமதி செய்தது, ஏ.ஆர்.ஒய். வர்த்தக குழுமம் தங்கம், வெள்ளியை இறக்குமதி செய்ய உரிமம் வழங்கியது, சுவிட் சர்லாந்து நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியது,
எஸ்.ஜி.எஸ். நிறுவனத்துக்கு ஒப் பந்தம் அளித்தது ஆகிய ஐந்து விவகாரங்களில் ஜர்தாரி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அவர் அதிபராக இருந்தபோது அதிபருக்குரிய உரிமைகளின்படி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இந்த வழக்கு களை அந்த நாட்டின் புலனாய்வு அமைப்பான என்.ஏ.பி. மீண்டும் தூசி தட்டி விசாரணையைத் தீவிரப் படுத்தியுள்ளது.
இவை தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி முகமது பஷீர் முன்னிலையில் ஜர்தாரி ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பஷீர், அடுத்த விசாரணையை ஜனவரி 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் நிருபர்களிடம் பேசியதாவது: எங்கள் கட்சித் தலைவர்கள் மீது சந்தேகத்தின்பேரில் மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. ஊழல் வழக்குகளில் ஜர்தாரி சிக்க வைக்கப்பட்டுள்ளார். எந்த வழக்கையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். கைது, சிறைகளுக்கு அஞ்ச மாட்டோம் என்றார்.