

வெளிநாடுவாழ் இந்தியர் நலத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ள புதிய சமூகப் பாதுகாப்பு திட்டத்தால் சவூதி அரேபியாவில் பணிபுரியும் 14 லட்சம் இந்திய தொழிலாளர்கள் பயன்பெறுவர். மகாத்மா காந்தி பிரவாசி சுரக்ஷா யோஜனா என்ற திட்டத்தை சவூதி அரேபியாவுக்கான இந்திய துணைத் தூதர் பயாஸ் அகமது கித்வாய் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்ததாக சவூதி அரசிதழில் கூறப்பட்டுள்ளது.
இலவச காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் ரீ செட்டில்மென்ட் (ஆர் அன்ட் ஆர் சேவிங்ஸ்) ஆகிய மூன்று அம்சங்கள் இந்த புதிய திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. அதாவது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) ஜனஸ்ரீ பீம யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படும். இதற்கான பிரீமிய தொகையை அரசு செலுத்தும்.
பயனாளி விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர ஊனமடைந்தாலோ அவரது குடும்பத்தினருக்கு ரூ.75,000 வழங்கப்படும். இயற்கையாக மரணம் ஏற்பட்டாலோ, விபத்தில் சிறிய அளவில் ஊனமடைந்தாலோ ரூ.37,500 வழங்கப்படும்.
இந்திய தொழிலாளர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு தேசிய ஓய்வூதிய முறை மற்றும் ஆர் அன்ட் ஆர் சேவிங்ஸ் ஆகியவற்றின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சிறப்புத் திட்டத்துக்கு பயனாளி ஆண் டுக்கு ரூ.5,000 வீதம் சந்தா செலுத்த வேண்டும். அரசு சார்பில் ஆண்களுக்கு ரூ.1,900-மும், பெண்களுக்கு ரூ.2,900-மும் 5 ஆண்டுக்கு செலுத்தப்படும்.
இதில் சேரும் தொகையை பொதுத் துறை ஓய்வூதிய நிதியம் நிர்வகிக்கும். பயனாளி 60 வயதை எட்டிய பிறகு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும். 18 முதல் 50 வயதுக் குட்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம். மேற்குப் பகுதியில் மட்டும் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள் என இந்திய துணைத் தூதர் (தொழிலாளர்) பிரபாத் கே.ஜெயின் தெரிவித்துள்ளார்.