

பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதிக்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படும் 3 முக்கிய பைப்லைன்களை தீவிரவாதிகள் வெடி வைத்து தகர்த்தனர். இந்த சம்பவத்தில் ஒரு பெண் பலியானார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள யூசபாபாத் அருகே நிகழ்ந்த இந்தத் தாக்குதல் காரணமாக, மாநிலத்தின் பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கு எரிவாயு சப்ளை ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து, சூய் நார்தன் எரிவாயு பைப்லைன்ஸ் நிர்வாக இயக்குநர் ஆரிப் ஹமீது கூறுகையில், "தீவிரவாதிகளின் சதியே இதற்குக் காரணம். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு சப்ளையாகும் எரிவாயுவைக் கொண்டு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குடியிருப்புகளின் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாது." என்றார்.
மொத்தம் உள்ள 4-ல் 3 பைப்லைன்களை தீவிரவாதிகள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் 30 நிமிடத்துக்குள் வெடிவைத்து தகர்த்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட பலூச் ரிபப்ளிகன் ஆர்மி (பிஆர்ஏ) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. மீத்தேன் எரிவாயுவைக் கொண்டுசென்ற இந்த பைப்லைன்கள் வெடித்தபோது, பயங்கரமாக தீப்பிடித்து எரிந்ததாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் இருந்தவர்களை வெளியேறுமாறு உள்ளூர் நிர்வாகம் கேட்டுக் கொண்டது. எனினும், இதில் ஒரு பெண் சிக்கி உயிரிழந்தார்.